FIFA உலகக்கோப்பை ஃபைனல்| பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கேரள அரசு!
2026 கால்பந்து உலகக்கோப்பை இறுதியில் ஸ்பெயின், அர்ஜெண்டினா அணிகள் மோதும் நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு ஃபைனலில் விளையாடும் ஸ்பெயின் மற்றும் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என எதிர்பார்க்கப்படும் அர்ஜெண்டினா மீது உலகம் கவனம் செலுத்துகிறது. இந்த ஆட்டத்தை மாணவர்கள் நேரலையில் காண கேரள அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது; ஆனால் திட்டமிட்ட தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள ஸ்பெயின் அணிக்கும், மெஸ்ஸியை கோப்பையுடன் ஓய்வுபெற அனுமதிக்கும் அர்ஜெண்டினா அணிக்குமான இந்த மோதல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு சீசனை பொறுத்தவரையில் தங்களுடைய தடுப்பாட்டத்தில் பட்டையை கிளப்பியிருக்கும் ஸ்பெயின் அணி அரையிறுதியில் பலம்வாய்ந்த பிரான்ஸை தோற்கடித்தது. அதேபோல ஆட்டத்தின் இறுதிநேரத்தில் வலுவான கம்பேக் கொடுக்கும் அர்ஜெண்டினா அணியில், மெஸ்ஸி அணிக்காகவும், மற்றவீரர்கள் மெஸ்ஸிக்காகவும் விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதல் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியாவின் கேரளாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக கால்பந்து இருக்கும் சூழலில், மாணவர்கள் போட்டியை காணும்வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் முதலமைச்சர் வி.டி. சதீசன். இருப்பினும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

