கிளப் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது மான்செஸ்டர் சிட்டி... கார்டியோலாவுக்கு இன்னொரு கோப்பை..!

மான்செஸ்டர் சிட்டி அணியின் சீசனோ கடந்த சில வாரங்களாக தடுமாறிக்கொண்டிருக்கிறது. பிரீமியர் லீக் அரங்கில் முதலிடத்தில் கம்பீரமாக இருந்த அந்த அணி, கடந்த 2 மாதங்களில் நிறைய புள்ளிகளை இழந்தது.
manchester city
manchester cityJon Super

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டி கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்று அசத்தியிருக்கிறது. இந்த ஆண்டு பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் என பட்டங்களாக வென்று குவித்த அந்த அணிக்கு இது மற்றுமொரு மகுடமாய் அமைந்திருக்கிறது.

கிளப் உலகக் கோப்பை

கிளப் உலகக் கோப்பை என்பது வழக்கமான உலகக் கோப்பை போல் நடத்தப்படுவது அல்ல. ஒவ்வொரு கண்டத்திலும் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் மட்டுமே இத்தொடரில் மோதும். இந்த ஆண்டுக்கான கிளப் உலகக் கோப்பையில் மொத்தம் 7 அணிகள் மோதின. ஐரோப்பாவின் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), வட அமெரிக்க சாம்பியனான லியான் (மெக்ஸிகோ), தென் அமெரிக்க சாம்பியனான ஃப்ளூமினேஸி (பிரேசில்), ஆசிய சாம்பியனான உராவா ரெட் டைமண்ட்ஸ் (ஜப்பான்), ஒசானியாவின் ஆக்லாண்ட் சிட்டி (நியூசிலாந்து), ஆப்பிரிக்காவின் அல் ஆலி (எகிப்து) என 6 அணிகள் தங்கள் கண்டத்தின் சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்று கிளப் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. இந்தப் போட்டி சவுதி அரேபியாவில் நடப்பதால், சவுதி லீக் சாம்பியனான அல் இட்டிஹாட் ஏழாவது அணியாக இந்தத் தொறில் பங்கேற்றது.

கிளப் உலகக் கோப்பையில் மான்செஸ்டர் சிட்டி

2022-23 சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்று தங்கள் பல நாள் தாகத்தை தீர்த்துக்கொண்ட மான்செஸ்டர் சிட்டி அணி, கிளப் உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது. கிளப் ரேங்கிங்கில் முன்னால் இருப்பதால், அந்த அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அரையிறுதி போட்டியில் ஜப்பானின் உராவா ரெட் டைமண்ட்ஸ் அணியோடு மோதியது மான்செஸ்டர் சிட்டி. ஆரம்பத்தில் கோலடிக்க சற்று தடுமாறியிருந்தாலும், 3-0 என வெற்றி பெற்றது மான்செஸ்டர் சிட்டி. ஓன் கோல் மூலம் முதல் கோல் வர, மாடியோ கோவசிச், பெர்னார்டோ சில்வா ஆகியோர் இரண்டாவது பாதியில் கோலடித்தனர்.

வெள்ளிக் கிழமை நடந்த இறுதிப் போட்டியில் பிரேசிலினின் ஃப்ளூமினேஸி அணியோடு மோதியது சிட்டி. போட்டி தொடங்கிய முதல் நிமிடத்திலேயே யூலியன் ஆல்வரஸ் கோலடித்து கணக்கைத் தொடங்கிவைத்தார். 27வது நிமிடத்தில் ஓன் கோல் மூலம் முன்னிலையை இரட்டிப்பாக்கியது அந்த அணி. இரண்டாவது பாதியில் ஃபில் ஃபோடன், ஆல்வரஸ் இருவரும் தலா 1 கோல் அடிக்க, 4-0 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணி

போட்டிகள்

முதல் சுற்று:
அல் இட்டிஹாட் 3 - 0 ஆக்லாண்ட் சிட்டி

இரண்டாவது சுற்று:
லியான் 0 - 1 உராவா ரெட் டைமண்ட்ஸ்
அல் ஆலி 3 - 1 அல் இட்டிஹாட்

அரையிறுதி:
உராவா ரெட் டைமண்ட்ஸ் 0 - 3 மான்செஸ்டர் சிட்டி
ஃப்ளூமினேஸி 2 - 0 அல் ஆலி

வெண்கலப் பதக்க போட்டி:
உராவா ரெட் டைமண்ட்ஸ் 2 - 4 அல் ஆலி

ஃபைனல்:
மான்செஸ்டர் சிட்டி 4 - 2 ஃப்ளூமினேஸி

சிட்டியின் சீசனை மாற்றுமா இந்த வெற்றி

மான்செஸ்டர் சிட்டி அணியின் சீசனோ கடந்த சில வாரங்களாக தடுமாறிக்கொண்டிருக்கிறது. பிரீமியர் லீக் அரங்கில் முதலிடத்தில் கம்பீரமாக இருந்த அந்த அணி, கடந்த 2 மாதங்களில் நிறைய புள்ளிகளை இழந்தது. கடைசி 5 பிரீமியர் லீக் போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற அந்த அணி, 4 போட்டிகளை டிரா செய்தது. இதனால் பிரீமியர் லீகில் நான்காவது இடத்துக்கு பின்தங்கியது அந்த அணி. சீசன் தொடக்கத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் கெவின் டி புருய்னா காயமடைந்தார். கடந்த சில வாரங்களில் எர்லிங் ஹாலண்ட், டொகு ஆகியோரும் கூட காயமடைந்தனர். லிவர்பூல், ஆர்செனல், ஆஸ்டன் விலா ஆகிய அணிகள் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முன்னேறியதால் சிட்டியின் மீது அதிக நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வெற்றி மான்செஸ்டர் சிட்டி அணிக்கு புது உத்வேகம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com