பிரீமியர் லீக்: டிரான்ஸ்ஃபர் விண்டோவை எப்படிப் பயன்படுத்தின டாப் 6 அணிகள்?!

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் டாப் 6 அணிகள் என்று கூறப்படும் அணிகள் எப்படி செயல்பட்டிருக்கின்றன.
premier League
premier Leaguepremier league

உலகின் மிக பிரபலமான கால்பந்து தொடராகக் கருதப்படும் பிரீமியர் லீக் வழக்கம்போல் இம்முறையும் பல மில்லியன் டாலர் டிரான்ஸ்ஃபர்களை சந்தித்திருக்கிறது. இந்த சம்மர் டிரான்ஸ்ஃபர் விண்டோ ஆகஸ்ட் மாத இறுதி வரை ஓப்பனாக இருக்கும். அன்று வரை அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடியும். இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் டாப் 6 அணிகள் என்று கூறப்படும் அணிகள் எப்படி செயல்பட்டிருக்கின்றன.

மான்செஸ்டர் சிட்டி

நடப்பு பிரீமியர் லீக் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி ஓரளவு அமைதியாகவே இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவைக் கடந்திருக்கிறது. கிளப் கேப்டன் இல்கே குண்டோகன் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் பார்சிலோனாவில் இணைந்துவிட்டார். அவர் இடத்தை நிரப்ப செல்சீயின் மடியோ கோவசிச்சை 25 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது சிட்டி. 2022 உலகக் கோப்பையில் அனைவரின் கவனத்தையும் திருப்பிய குரோயேஷிய டிஃபண்டர் ஜாஸ்கோ குவார்டியோலை ஒப்பந்தம் செய்து ஸ்டார்கள் நிறைந்த தங்கள் டிஃபன்ஸை மேலும் பலப்படுத்தியிருக்கிறது அந்த அணி. சவுதி அரேபியாவுக்குச் சென்ற ரியாத் மாரஸ் இடத்தை அந்த அணி இன்னும் நிரப்பவில்லை. ஆனால் கம்யூனிட்டி ஷீல்டில் கோலடித்த கோல் பால்மரை அந்த இடத்துக்கான ஆப்ஷனாக கார்டியோலா கருதலாம். கைல் வாக்கர், ஜோ கன்சலோ போன்ற வீரர்கள் வெளியேறும் வாய்ப்பு இருப்பதால் டிஃபன்ஸில் இன்னும் சில புதிய வீரர்களைக் காணலாம். அட்டாக்கிங் வீரர்கள் ஒரே சமயத்தில் காயமடையாமல் இருந்தால் சிட்டி கடந்த சீசனைப் போல இம்முறையும் ஆதிக்கம் செலுத்தலாம்.

மான்செஸ்டர் யுனைடட்

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் துரிதமாக செயல்பட்டு தங்கள் அணியில் இருந்த பெரும்பாலான ஓட்டைகளை அடைத்திருக்கிறது மான்செஸ்டர் யுனைடட். சமீப காலமாகவெ கோல்கீப்பர் டேவிட் டி கேவின் செயல்பாடு சுமாராக இருந்துவந்த நிலையில், ஆண்ட்ரே ஒனானாவை வாங்கி அந்த இடத்தை அடுத்த சில ஆண்டுகளுக்கு செட்டிலாக்கிவிட்டது யுனைடட். நடுகளத்தில் செல்சீயின் மேசன் மவுன்ட்டை வாங்கி பலப்படுத்தியிருக்கிறது. அவர்களை தொடர்ந்து பிரச்சனைக்குள்ளாக்கிய ஸ்டிரைக்கர் பிரச்சனையை டென்மார்க்கின் ராஸ்மஸ் ஹியூம்லண்ட் மூலம் சரிசெய்திருக்கிறார்கள். தேவையற்ற பல வீரர்களை வெளியேற்றிருக்கும் அந்த அணி, ஸ்காட் மெக் டோமினேய், ஃபிரெட், முன்னாள் கேப்டன் மகுயர் போன்றவர்களையும் வெளியேற்ற முயற்சி செய்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு சிறந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ அந்த அணிக்கு அமைந்திருக்கிறது.

ஆர்செனல்

ஆர்டேடா தலைமையில் தங்கள் எழுச்சியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது ஆர்செனல். இந்த முறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் விளையாடப் போகிறார்கள் என்பதால் தரமான பல வீரர்களை வாங்கிக்கொண்டிருக்கிறது ஆர்செனல். டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் டெக்லன் ரைஸை 105 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியிருக்கிறது அந்த அணி. இவர்கள் தங்கள் பங்கிற்கு செல்சீயிடமிருந்து கை ஹாவர்ட்ஸை வாங்கியிருக்கிறார்கள். டிஃபன்ஸில் இளம் நெதர்லாந்து வீரர் யுரியன் டிம்பர் அந்த அணியின் தரத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரென்ட்ஃபோர்ட் கோல்கீப்பர் டேவிட் ரயா கூடிய விரைவில் அந்த அணியில் இணையவிருக்கிறார். இப்படி ஒவ்வொரு ஏரியாவையும் இந்த சீசன் பலப்படுத்தியிருக்கிறது ஆர்செனல். வெளியேறியிருக்கும் பல்வேறு வீரர்களில் முன்னாள் கேப்டன் கிரானித் ஷாகா மட்டுமே குறிப்பிடத்தக்கவர். ஆர்டேடாவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ.

லிவர்பூல்

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ மூலம் நடுகளத்தில் மிகப் பெரிய மாற்றம் கண்டிருக்கிறது லிவர்பூல். கேப்டன் ஜோர்டன் ஹெண்டர்சன், ஃபெபினியோ இருவரும் சவுதிக்கு சென்றுவிட்டனர். மில்னர் பிரைட்டன் அணியில் இணைந்துவிட்டார். அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சாம்பர்லைனை ரிலீஸ் செய்துவிட்டது அந்த அணி. ஒட்டுமொத்த நடுகளமும் காலியான நிலையில் டொமினிக் சொபோஸ்லாய், அலெக்சிஸ் மெக்காலிஸ்டர் இருவரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது லிவர்பூல். கிளப் ஜாம்பவானாக கருதப்படும் ஃபிர்மினியோ வெளியேறிவிட்டாலும், ஏற்கெனவே போதுமான அட்டாகிங் வீரர்கள் இருப்பதால், அது பெரிதாக பாதிக்கப்போவதில்லை. அதேசமயம், ஃபெபினியோவின் டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் ரோலுக்கு இன்னும் சரியான வீரரை கிளாப் வாங்கவில்லை. சௌதாம்ப்டனின் ரோமியோ லேவியாவை வாங்க அந்த அணி முயற்சி செய்துவருகிறது. இன்னும் சில நடுகள வீரர்கள் வந்தாலே ஒழிய இது சீரான டிரான்ஸ்ஃபர் விண்டோவாக அந்த அணிக்கு அமையும்.

செல்சீ

செல்சீ விற்றிருக்கும் வாங்கியிருக்கும் வீரர்களின் பட்டியல் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது!

அணியிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்கள்: சீஸர் ஆஸ்பிளிகியூடா, கலிடூ கூலிபாலி, மடியோ கோவசிச், எடுவார்ட் மெண்டி, என்கோலோ கான்டே, கிறிஸ்டியன் புலிசிச், கை ஹாவர்ட்ஸ், பியர் எமரிக் அபாமயாங், ரூபன் லோஃப்டஸ் சீக் மற்றும் பலர்.....

அணியில் இணைந்திருக்கும் முக்கிய வீரர்கள்: கிறிஸ்டோஃபர் என்குன்கு, நிகோலஸ் ஜாக்சன், ஆண்ட்ரே சான்டோஸ், ராபர்ட் சான்சஸ், மலோ கஸ்டோ, லெஸ்லி உகோசுக்வு, ஆக்சல் டிசாஸி, மற்றும் பலர்...

ஒட்டுமொத்த கால்பந்து உலகத்துக்கும் வீரர்களை சப்ளை செய்திருக்கும் செல்சீ இன்னும் பணத்தை கொட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதிக வீரர்கள் வெளியேறியிருப்பதால் இப்போது 'நடுகளக்கு ஆட்கள் தேவை' என்று நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 6 மாதங்களாக வாங்க முயற்சி செய்துவரும் மாய்சஸ் கைசீடோவை இன்னும் அவர்களால் வாங்க முடியவில்லை. இம்மாத இறுதிக்குள் அவரை வாங்கினால் அந்த அணி ஓரளவு பேலன்ஸோடு இருக்கும். மிகவும் இளம் அணியாக இருந்தாலும், அதை சரியாக வழிநடத்தக்கூடிய மரிஷியோ பொஷடினோ பயிற்சியாளராக இருப்பது அந்த அணிக்கு சாதகமான விஷயம்.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

மிகமுக்கியமாக புதிய பயிற்சியாளராக ஆஞ்சி போஸ்டகாக்லூவை ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த அணி. பொஷடினோ தலைமையில் எழுச்சி பெற்றதைப் போல் இப்போது இன்னொரு எழுச்சியை அந்த அணி சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியேறவிருக்கும் கிளப் கேப்டன் ஹூகோ லோரிஸுக்குப் பதில் குக்லியால்மோ விகாரியோவை வாங்கியிருக்கிறார்கள். ஜேம்ஸ் மேடிசன், மனோர் சாலமன், பெட்ரோ போரோ, மிக்கி வேன் டி வென் போன்ற இளம் வீரர்களை வாங்கியிருப்பது அந்த அணி அடுத்த கட்ட பயணத்துக்குத் தயார் என்பதை தெளிவுபடுத்துகிறது. லோனில் இருந்த குலுசெவ்ஸ்கியின் ஒப்பந்தம் நிரந்தரமாக்கப்பட்டிருக்கிறது. லூகாஸ் மௌரா, ஹேரி விங்க்ஸ் அணியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். ஹேரி கேன் நிலை தான் இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. பேயர்ன் மூனிச்சிடமிருந்து அவரைப் பாதுகாத்தால், அதுவே இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் ஸ்பர்ஸின் பெரிய வெற்றியாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com