EURO 2024: பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி... கஷ்டப்பட்டு 3 புள்ளிகளை உறுதி செய்த பிரான்ஸ்..!

எதிர்பார்த்ததைப் போல இந்தப் போட்டி பிரான்ஸுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆஸ்திரிய அணி தங்களின் பிரஸ்ஸிங்கால் பிரான்ஸுக்கு பெரும் சவால் கொடுத்தது.
Ousmane Dembele
Ousmane DembeleAndreea Alexandru

ஜெர்மனியில் நடந்து வரும் யூரோ 2024 தொடரில் நேற்று நடந்த ஆட்டங்களில் பிரான்ஸ், ரொமேனியா மற்றும் ஸ்லொவாகியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. முன்னணி அணியான பெல்ஜியமை வீழ்த்தி இந்தத் தொடரின் முதல் அதிர்ச்சியைப் பரிசளித்திருக்கிறது ஸ்லொவாகியா.

ரொமானியா vs உக்ரைன்

மூனிச்சில் நடந்த இந்தப் போட்டியில் பெரிய அணிகள் எதுவும் ஆடவில்லை என்றாலும் உக்ரைன் வெற்றி பெறும் என்று தான் பெரும்பாலும் நம்பப்பட்டது. உக்ரைன் அணியில் முட்ரிக், ஜின்சென்கோ, டோவ்பிக், லுனின் என ஐரோப்பாவின் முன்னணி கிளப்களில் ஆடும் வீரர்கள் பலர் இருப்பதால் அந்த அணி எளிதாக வென்றிடும் என்றே கருதினார்கள். ஆனால் அனைவரின் நம்பிக்கையையும் பொய்யாக்கியது ரொமானியா. உக்ரைன் அணி பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அவர்களால் கோல் ஏதும் போட முடியவில்லை. ஆனால், ரொமானியா கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. 29வது நிமிடத்தில் பாக்சுக்கு வெளியே இருந்து ஒரு அட்டகாசமான கோலடித்து ரொமானியாவுக்கு முன்னிலை கொடுத்தார் கேப்டன் ஸ்டான்சு. முதல் பாதி 1-0 என முடிய, இரண்டாவது பாதியிலாவது உக்ரைன் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 15 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்தது ரொமானியா. ரஸ்வான் மரின் (53வது நிமிடம்), டெனிஸ் டிராகுஸ் (57வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க, ரொமானியோ 3-0 என முன்னிலை பெற்றது. கடைசி வரை முயற்சி செய்தும் உக்ரைன் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 71 சதவிகித நேரம் பந்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தும், உக்ரைன் அணியால் இலக்கை நோக்கி 2 ஷாட்கள் மட்டுமே அடிக்க முடிந்தது!

பெல்ஜியம் vs ஸ்லோவாகியா

கடந்த சில உலகக் கோப்பைகள், யூரோ தொடர்களிலெல்லாம் கோப்பை வெல்லக்கூடிய ஒரு அணியாகக் கருதப்பட்டுவந்த பெல்ஜியம், இப்போது அந்த அந்தஸ்த்தை இழந்திருந்தது. இருந்தாலும் எளிதான ஒரு பிரிவில் இடம்பெற்றிருப்பதால், நிச்சயம் அந்த அணி எளிதான வெற்றிகள் பெரும் என்று கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு பெரிய தொடரிலும் சீக்கிரமாகவே வரும் அப்செட் இந்தப் போட்டியின் மூலம் இந்த யூரோவுக்குக் கிடைத்தது. 7வது நிமிடத்தில் ஜெரமி டொகு ஒரு மோசமான பாஸ் கொடுக்க, அதைப் பயன்படுத்திக்கொண்டது ஸ்லொவாகியா. பொஸனிக் அடித்த ஷாட்டை பெல்ஜியம் கோல்கீப்பர் கஸ்டீல்ஸ் தடுத்திருந்தாலும், ரீபௌண்ட் ஆன பந்தை வாலி மூலம் கோலாக்கினார் இவான் ஸ்க்ரான்ஸ். ஸ்க்ரான்ஸ், பொஸனிக், ஹராஸ்லின் ஆகியோர் பெல்ஜியம் டிஃபன்ஸுக்கு பெரும் தலைவலியாக இருந்தனர். முதல் பாதியில் பெல்ஜியம் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாதியில் அட்டாக்கில் சிறப்பாக செயல்பட்டது அந்த அணி. அதன் பலனாக 56 நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி லுகாகு கோலடித்தார். ஆனால் கொண்டாடி முடித்த பின் அவர் ஆஃப் சைடில் இருந்ததாக கோலை நிராகரித்தது VAR. முதல் பாதியில் சில நல்ல வாய்ப்புகளை தவறவிட்ட அவருக்கு இது இன்னும் மோசமாக அமைந்தது. தொடர்ந்து போராடிய பெல்ஜியம் அணி 86வது நிமிடத்தில் கோல் அடித்தது. மீண்டும் லுகாகு. ஆனால், இம்முறை லுகாகுக்கு பாஸ் கொடுத்த ஒபெண்டாவின் கையில் பந்து பட்டிருந்ததால், இந்த கோலும் நிராகரிக்கப்பட்டது. இந்த சோகங்களுக்கு மத்தியிலேயே இந்தப் போட்டியை இழந்தது பெல்ஜியம்.

ஆஸ்திரியா vs பிரான்ஸ்

எதிர்பார்த்ததைப் போல இந்தப் போட்டி பிரான்ஸுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆஸ்திரிய அணி தங்களின் பிரஸ்ஸிங்கால் பிரான்ஸுக்கு பெரும் சவால் கொடுத்தது. 38வது நிமிடத்தில் அதிஷ்டவசமாக ஆஸ்திரிய வீரர் வோபரின் ஓன் கோல் மூலம் முன்னிலை பெற்றது பிரான்ஸ். அதுவே அவர்கள் இந்தப் போட்டியில் அடித்த ஒரே கோலாகவும் அமைந்தது. நடுகளத்தில் பிரான்ஸுக்கு சவால் கொடுத்த ஆஸ்திரியா, அடிக்கடி பிரான்ஸ் டிஃபன்ஸுக்கும் தலைவலி அளித்தது. இருந்தாலும் திடமான டிஃபன்ஸாலும், கான்டேவின் முரட்டுத்தனமான ஆட்டத்தாலும் அந்த அணி ஆஸ்திரியா கோலடிக்காமல் பார்த்துக்கொண்டது. அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், பிரான்ஸ் அணியின் எம்பாபே, ஜிரோட், தூரம் போன்ற அனைவருமே கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் தவறவிட்டனர். கடைசி கட்டத்தில் ஆஸ்திரியா பிரான்ஸ் பாக்ஸை முற்றுகையிட்டிருந்தாலும், பிரான்ஸ் நன்றாக டிஃபண்ட் செய்து வெற்றி பெற்றது.

இன்றைய போட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com