காலியாகவே இருக்கும் மைதானங்கள்.. வரவேற்பு பெறாத கிளப் உலகக்கோப்பை கால்பந்து!
உலகமெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் அபிமான விளையாட்டுகளில் முந்தி நிற்பது கால்பந்து தான். ஆனால் கிளப் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்களை காண மைதானங்களில் ரசிகர்கள் அந்தளவுக்கு குவியவில்லை. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகவே இருந்ததாகவே தெரியவருகிறது.
களைகட்டாத கிளப் உலகக்கோப்பை..
குரூப் சுற்று ஆட்டங்களில் 48 போட்டிகள் நடந்த நிலையில் மைதானங்களில் ரசிகர்களின் வருகை 56.7 சதவீதம் என்ற அடிப்படையிலேயே உள்ளது. பல்வேறு மைதானங்களில் சுமார் 30 லட்சம் பேர் போட்டிகளை காண வாய்ப்பிருந்தும், அதற்கு பாதி அளவிலேயே நேரில் கண்டுள்ளதாகத் தெரிகிறது.
நாக் அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதிபெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒன்பது கிளப்புகளும், பிரேசிலில் இருந்து 4 அணிகளும், அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, சவுதி அரேபியா நாடுகளில் இருந்து தலா ஒரு அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இதனால் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சர்வதேச கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.