லிவர்பூலுக்கு எதிராக டிரா செய்தது செல்சீ..புதிய சீசனில் துளிர்விடும் நம்பிக்கை!

லிவர்பூலுக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியை 1-1 என டிரா செய்திருக்கிறது செல்சீ. கடந்த சீசன் செயல்பாட்டுக்குப் பிறகு பெரிய அளவுக்குத் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த அந்த அணி, புதிய பயிற்சியாளர் தலைமையில் நல்லதொரு தொடக்கம் கண்டிருக்கிறது.
Chelsea - Premier League
Chelsea - Premier LeagueTwitter

2023-24 பிரீமியர் லீக் சீசன் இந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் லிவர்பூல் அணியோடு ஞாயிற்றுக் கிழமை ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதியது செல்சீ. கடந்த சீசனில் நான்கு பயிற்சியாளர்கள் மாறியும் பெரிதாகத் தடுமாறி 12வது இடமே பிடித்திருந்தது அந்த அணி. அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் சீனியர் வீரர்கள் பலரும் வெவ்வேறு அணிகளுக்குச் சென்றுவிட்டனர். முற்றிலும் இளம் அணியாக இருக்கும் செல்சீ, முதல் போட்டியிலேயே லிவர்பூலுடன் மோதுவதால் சற்று தடுமாறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வெற்றி, 3 புள்ளிகள் என்ற அளவில் இல்லாமல், ஒரு நல்ல செயல்பாடு போதும் என்பதாகவே இருந்தது.

செல்சீ பிளேயிங் லெவன் vs லிவர்பூல்: ராபர்ட் சான்சஸ், ஆக்சல் டிசாஸி, தியாகோ சில்வா, லெவி கால்வெல், ரீஸ் ஜேம்ஸ், என்சோ ஃபெர்னாண்டஸ், கார்னி சுக்வமீகா, கானர் காலகர், ஜேம்ஸ் சில்வெல், ரஹீம் ஸ்டெர்லிங், நிகோலஸ் ஜாக்சன்.

முதலில் தடுமாறிய செல்சீ அணி! 

இந்தப் போட்டியில் நான்கு வீரர்கள் செல்சீ அணிக்காக அறிமுகம் ஆனார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு லிவர்பூல் அணியோடு மோதிய செல்சீ ஸ்குவாடில் இப்போது நான்கு வீரர்கள் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். இப்படியொரு புதிய அணியாக இருக்கும்போது, எதிர்பார்ப்பு குறைவாகத்தானே இருக்கும்! செல்சீயின் செயல்பாடும் முதல் 30 நிமிடங்கள் அதற்கு ஏற்றார்போலத்தான் இருந்தது.

chelsea vs liverpool
chelsea vs liverpool

அதிக அட்டாக்கர்களுடன் களமிறங்கிய லிவர்பூல் அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. 13வது நிமிடத்தில் பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷூட் செய்த சலா, கிராஸ் பாரை அடித்தார். இருந்தாலும் அந்த அணி தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தது. 18வது நிமிடத்தில் முகமது சலா கொடுத்த அற்புதமான பாஸை அதி அற்புதமாக ஃபினிஷ் செய்து லிவர்பூலுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் லூயிஸ் டியாஸ். அடுத்ததாக 29வது நிமிடத்தில் சலாவே கோலடித்தார். ஆனால், அவர் ஆஃப் சைட் பொசிஷனில் இருந்து பந்தை வாங்கியதால் அந்த கோல் VAR நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. இப்படி முதல் 30 நிமிடங்களில் தொடர்ந்து எதிரணி அட்டாக் செய்ததால், செல்சீ ரசிகர்கள் சற்று ஆட்டம் கண்டிருந்தனர். ஆனால், ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.

VAR மூலம் மிஸ் ஆன கோல்..ஆட்டத்திற்குள் வந்த செல்சீ

செல்சீக்கு இருந்தது போலவே லிவர்பூலுக்கும் ஒரு பிரச்சனை இருந்தது. அந்த அணியில் டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்ட் வீரர்கள் இல்லாததால், செல்சீ வீரர்களால் அவர்களின் நடுகளத்தைக் கடப்பது கொஞ்சம் எளிதாகவே இருந்தது. நன்றாக பால் பொசஷன் வைத்து, தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்த செல்சீ 38வது நிமிடத்தில் இந்த சீசனில் தங்கள் முதல் கோலை அடித்தது. செல்சீக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை லிவர்பூல் சரியாக கிளியர் செய்யாமல் போக, அது பெனால்டி ஏரியாவுக்குள் வந்தது. அதை ஸ்லைட் செய்துகொண்டே கோலுக்குள் அனுப்பினார் அறிமுக வீரர் டிசாஸி. ஆட்டம் சமன் ஆனது!

chelsea vs liverpool
chelsea vs liverpool

அந்த கோல் அடித்த அடுத்த சில நொடிகளிலேயே இரண்டாவது கோலை அடித்தது செல்சீ. என்சோ கொடுத்த த்ரூ பாலை பென் சில்வெல் மிகச் சிறப்பாகப் பெற்று கோலாக்கினார். ஒட்டுமொத்த மைதானமும் அதிர்ந்துகொண்டிருக்க மீண்டும் கோலை நிராகரித்தது VAR. அதன்பிறகு ஆட்டத்தில் செல்சீயின் பிடி இறுகியது. முதல் பாதி 1-1 என முடிவுக்கு வந்தது.

டிரா செய்த செல்சீ!

இரண்டாவது பாதியில் முதல் பாதியைப் போல் அதிக அட்டாக்குகள் நடக்கவில்லை. இருந்தாலும் இரண்டு அணிகளுக்கும் அவ்வப்போது ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கவே செய்தன. ஆனால் அந்த வாய்ப்புகளை இரு அணிகளாலும் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. லிவர்பூல் அணிக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், செல்சீ ரசிகர்களுக்கு தங்கள் அணியின் செயல்பாடு பெரும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது. கைசீடோ போன்ற ஒரு டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் அணியில் இணையும்போது அவர்களின் செயல்பாடு இன்னும் சிறப்பாகும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

chelsea vs liverpool
chelsea vs liverpool

ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடந்த மற்றொரு பிரீமியர் லீக் போட்டியும் டிராவில் முடிந்தது. பிரென்ட்ஃபோர்ட் மற்றும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதிய அந்த ஆட்டம் 2-2 என முடிவுக்கு வந்தது. பிரென்ட்ஃபோர்ட் அணிக்காக எம்பாமோ (பெனால்டி), வீஸா இருவரும் கோலடித்தனர். ஸ்பர்ஸுக்கு கிறிஸ்டியன் ரொமேரோ, எமர்சன் ராயல் என டிஃபண்டர்கள் மூலம் இரு கோல்களும் வந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com