இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் போச்செட்டினோ! சரிவிலிருந்து மீண்டுவந்து கோப்பையை தூக்குமா Chelsea அணி?

இளம் வீரர்களை கொண்ட புதுமையான அணி, அவர்களை வழிநடத்தக்கூடிய வலிமையான பயிற்சியாளர் என ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்துள்ளது செல்சீ அணி.
chelsea FC
chelsea FCTwitter

2023-24 கால்பந்து சீசன் தொடங்கிவிருக்கிறது. முன்னணி அணிகள் ஒரு வெற்றிகரமான சீசனுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வழக்கமான ஒரு சீசனாக இருந்தால், செல்சீ கால்பந்து கிளப்பின் ரசிகர்கள் தங்கள் அணி கோப்பை வெல்வதற்கான ஒரு அணியாக இருக்கிறதா என்று விவாதித்துக்கொண்டிருப்பார்கள். ஏனெனில், இந்த சீசன் வழக்கமான ஒரு சீசனாக இருக்கப்போவதில்லை. 2022-23 சீசன் வழக்கமானதாக இருக்கவில்லை. ஒரு மிகமோசமான சீசனுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பழைய பாதைக்குத் திரும்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது புதுமையான இளமையான செல்சீ அணி. அந்த அணியின் புதிய பயிற்சியாளர் மரிஷியோ பொஷடினோவுக்கும் நிரூபிப்பதற்கு நிறைய இருக்கிறது. எனவே அந்த கிளப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இது மிகவும் முக்கியமான ஒரு சீசனாக அமையப்போகிறது.

உக்ரைன் - ரஷ்யா மோதலால் பாதாளத்தில் வீழ்ந்த செல்சீ!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விளையாட்டு உலகில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய தொழிலதிபரும் செல்சீ அணியும் உரிமையாளருமான ரோமன் ஆப்ரமோவிச்சுக்கு ரஷ்ய அரசோடு நட்புறவு இருந்ததால், இங்கிலாந்தில் இருந்த அவருடைய சொத்துக்களை முடக்கியது அந்நாட்டு அரசாங்கம். அதனால் செல்சீ அணியின் உரிமை செல்சீ அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. அதன்பின் அந்த அணியை அமெரிக்க தொழிலதிபர் டாட் போலி அடங்கிய புளூ கோ நிறுவனம் வாங்கியது. அது பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது!

chelsea FC
chelsea FC

சீசன் தொடக்கத்திலேயே சில புதிய வீரர்களை வாங்கியது செல்சீ நிர்வாகம். நல்ல முடிவுகள் கிடைக்குமென்று நினைத்திருந்த நிலையில், உரிமையாளர் போலிக்கும், மேனேஜர் தாமஸ் டுகெலுக்கும் இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. அதனால், அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணியில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த கிரஹம் பாட்டர் செல்சீயின் புதிய மேனேஜராக பணியமர்த்தப்பட்டார். ஆனால் முடிவுகள் மாறவேயில்லை.

chelsea FC
chelsea FC

இந்நிலையில் ஜனவரி டிரான்ஸ்ஃபர் விண்டோவில் யாரும் எதிர்பாராத அளவுக்குப் பணத்தை வாரி இறைத்து பல்வேறு இளம் வீரர்களை வாங்கியது செல்சீ அணி நிர்வாகம். ஒரு இளம் அணியை உருவாக்குவதே அவர்களின் லட்சியம் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த முயற்சிக்கான முடிவுகள் ஏதும் எட்டவில்லை.

சொதப்பிய நிர்வாகத்தின் முடிவுகள்! 17 வருடங்களில் எட்டிய மோசமான நிலை!

சிறிய அணிகளுக்கு எதிராக கோல் அடிக்கவும், டிரா செய்யவுமே கூட பெரும் சவாலாக இருந்தது. அதனால், கிரஹம் பாட்டரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு சில வாரங்கள் முன்பு எவர்டன் மேனேஜர் பதவியிலிருந்து வெளியேற்றபட்டிருந்த நிலையில், செல்சீ அணியின் ஜாம்பவான் வீரர் ஃப்ராங்க் லேம்பார்ட் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டார். இறுதியில் வெறும் 44 புள்ளிகள் மட்டுமே பெற்று 12வது இடத்தில் முடித்தது செல்சீ. கடந்த 17 ஆண்டுகளில், செல்சீ டாப் 10 இடங்களுக்குள் முடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறை.

chelsea FC
chelsea FCGetty Images

சுமார் 500 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக செலவு செய்த செல்சீயால், ஐரோப்பிய இடங்களுக்குள் கூட முடிக்க முடியவில்லை. அணியின் செயல்பாட்டை விடவும், நிர்வாகத்தின் முடிவுகள் பெரிதாக விமர்சிக்கப்பட்டன. செல்சீயின் முதலீடு கடந்த சீசனோடு முடிந்துவிடவில்லை. இந்த சீசனிலும் தொடர்ந்து வீரர்களை வாங்கிக்கொண்டிருக்கிறது அந்த அணி. ஆனால் அதைவிட அதிகமான வீரர்கள் இந்த சீசனில் வெளியேறியிருக்கின்றனர். கேப்டன் ஆஸ்பிளிகியூடா, என்கோலோ கான்டே, கலிடூ கூலிபாலி, மடியோ கோவசிச் உள்ளிட்ட முக்கிய சீனியர் வீரர்கள் அணியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். சொல்லப்போனால் இப்போது கேப்டன்சி இடமே காலியாக இருக்கிறது! இன்னும் சில மிட்ஃபீல்ட் இடங்கள் நிரப்பப்படவேண்டியிருக்கிறது. இது ஒரு புறமிருக்க, மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், ஆர்செனல், மான்செஸ்டர் யுனைடட் போன்ற அணிகள் சிறப்பான பிசினஸ் செய்துகொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த சீசனை எதிர்கொள்கிறது செல்சீ.

பழகிய களத்தில் மீண்டெழுவாரா போச்செட்டினோ!

செல்சீ அணியின் புதிய பயிற்சியாளராகப் பதவியேற்றிருக்கும் மரிஷியோ போச்செட்டினோ பிரீமியர் லீக் களத்துக்குப் பழக்கப்பட்டவர். சௌதாம்ப்டன், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்தவர், 6 சீசன்கள் இந்த லீகில் மேனேஜராக இருந்திருக்கிறார். அந்த இரண்டு அணிகளையும் சிறப்பாக வழிநடத்தி நல்ல முன்னேற்றங்கள் கண்டிருக்கிறார். டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை 2019 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வரையிலும் அழைத்துச் சென்றார். ஆனால், அடுத்த ஐந்தே மாதங்களில் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இளம் அணியை ஒரு சிறப்பான யூனிட்டாக மாற்றியதற்காகப் பெரிதும் கொண்டாடப்பட்ட அவரை ஒப்பந்தம் செய்ய பல முன்னணி அணிகளும் விரும்பின. இறுதியில் 2021ம் ஆண்டு அவரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது.

அங்கு அவருடைய பணி எளிதாக இருக்கவில்லை. மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே போன்ற சூப்பர் ஸ்டார்கள் அடங்கிய ஒரு யூனிட், அளவு கடந்த எதிர்பார்ப்பு, கோப்பைகள் வென்றுகொண்டே இருக்கவேண்டும் என்ற நெருக்கடி... இவையெல்லாம் அவரது பணியை கடினமாக்கின. தொடர்ந்து 3 முறை லீக் 1 பட்டம் வென்றிருந்த பிஎஸ்ஜி, அவர் பதவியேற்ற முதல் சீசனில் இரண்டாவது இடமே பிடித்தது. அதுவே அவர் வேலையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியது. அடுத்த சீசனில் லீக் பட்டம் வென்றிருந்தாலும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் ஜூலை 2022 பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் அவர். அடுத்த ஒரு ஆண்டுக்கு எந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பையும் அவர் ஏற்காத நிலையில், இந்த மே மாதம் செல்சீ அணியின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள சம்மதித்தார்.

4 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இருந்த மேனேஜர், அதன்பிறகு இரண்டு அணிகளால் வெளியேற்றப்பட்டுவிட்டார். அடுத்த அலெக்ஸ் ஃபெர்குசன், அடுத்த மொரினியோ என்றெல்லாம் பாராட்டப்பட்டிருந்த போச்செட்டினோ இப்போது மீண்டும் தன் திறமையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கம்பேக் கொடுக்க காத்திருக்கும் செல்சீ மற்றும் போச்செட்டினோ!

இரண்டு தரப்புமே கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இருவருக்குமே இது சரியான களமும் கூட. ஒரு இளம் அணி, அதை சிறப்பாக வழிநடத்தக்கூடிய ஒரு மேனேஜர்... நிச்சயம் அவகாசம் கொடுக்கப்பட்டால் செல்சீயை முன்பைப் போல் கோப்பை வெல்லத் தகுந்த அணியாக போச்செட்டினோல் உருவாக்க முடியும். ஆனால், தன் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே அவகாசமெல்லாம் கேட்கப்போவதில்லை என்று தீர்க்கமாக கூறியிருக்கிறார். 'இது செல்சீ. இங்கு வெற்றிகள் அவசியம். அதுவே எங்கள் இலக்கு' என்று நம்பிக்கையோடு தெரிவித்திருக்கிறார். அந்த நம்பிக்கை களத்திலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com