FIFA| 2 கோல்கள் அடித்த பெல்லிங்காம்.. 4வது முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது இங்கிலாந்து.!
2026 ஃபிபா உலகக்கோப்பை காலிறுதியில் நார்வேவை எதிர்கொண்ட இங்கிலாந்து, பெல்லிங்காம் இரு கோல்களின் மேன்மையால் அரையிறுதிக்கு முன்னேறியது. 45+2 நிமிடத்தில் சமநிலை கோலும், கூடுதல் நேரத்தில் வெற்றி கோலும் அடித்த அவர், ஒரே உலகக்கோப்பையில் இரண்டு நாக்-அவுட் போட்டிகளில் பல கோல்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரராக வரலாறு படைத்தார்.
2026 ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்ற இத்தொடரானது எதிர்ப்பார்த்ததை விட அசத்தலாகவே நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் 32 அணிகள் தகுதிபெற்ற நிலையில், ரவுண்ட் 32-ல் சிறப்பாக செயல்பட்ட 16 அணிகள் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் ரவுண்ட் 16-ல் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரேசில், போர்ச்சுகல் அணிகள் வெளியேறிய நிலையில், காலிறுதிப்போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்று அசத்தியிருந்தன.
இந்தசூழலில் நடைபெற்ற முதல் 2 காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற 3வது காலிறுதிப்போட்டியில் நார்வே மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மியாமி கார்டனில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 36வது நிமிடத்தில் நார்வே அணியின் ஆண்ட்ரியாஸ் ஷெல்டரப் முதல் கோலை அடித்து நார்வே ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார். 1-0 என நார்வே லீட் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் கோலை தேடியது. நடப்பு உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிவரும் பெல்லிங்காம் சரியாக 45+2 நமிடத்தில் இங்கிலாந்துக்காக கோலடிக்க முதல் பாதி முடிவில் 1-1 என ஆட்டம் சமன் பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது பாதியில் யார் கோலடிப்பார்கள் என ஆட்டம் சூடுபிடிக்க, இரண்டு அணிகளும் கோலடிக்க விடாமல் தடுத்ததால் 90 நிமிடங்களாக 2வது கோல் வரவே இல்லை. இந்தசூழலில் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் 2வது கோலடித்த பெல்லிங்காம் இங்கிலாந்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச்சென்று அசத்தினார்.
1966ஆம் ஆண்டு கோப்பை வென்ற இங்கிலாந்து அணி 1990, 2018ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 4வது முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது.
அதேபோல ரவுண்ட் 16, காலிறுதிப்போட்டி என இரண்டிலும் 2 கோல்கள் அடித்த பெல்லிங்காம், ஒரே உலகக் கோப்பைத் தொடரில், 2 நாக்-அவுட் போட்டிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் 24 வயதை எட்டுவதற்குள் அதிக உலகக்கோப்பை கோல்கள் அடித்த வீரர்களில் 7 கோல்களுடன் பீலெ சாதனையை சமன்செய்தார் பெல்லிங்காம், முதல் இடத்தில் எம்பாப்பே 12 கோல்களுடன் நீடிக்கிறார்.

