“338 கோல்கள் ; 4 கோல்டன் பூட் விருது” - இங்கி.கேப்டன் ஹேரி கேனை வாங்க முயலும் பேயர்ன் மூனிச் அணி!

ஸ்டார் வீரராக இருந்தும் ஒரு கோப்பையை கூட வெல்லாத ஹேரி கேன், கோப்பை வெல்லும் அணிக்கு நகர்வாரா? இல்லை பழைய டாட்டன்ஹான் ஹாட்ஸ்பர் அணியிலேயே நீடிப்பாரா? தொடரும் போராட்டம்.
Harry Kane
Harry KaneTwitter

இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேனை ஜெர்மனியின் பேயர்ன் மூனிச் அணி ஒப்பந்தம் செய்ய முற்படுவதாக தற்போது செய்திகள் பரவி வருகிறது. பல ஆண்டுகளாக அவர் முன்னணி அணிகளுக்கு நகர்வார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியில் இருந்து அவர் வெளியேறுவதற்கான வாய்ப்பு இந்த சீசனில் அதிகரித்திருக்கிறது. இதுநாள் வரை ஒரு கோப்பை கூட அவர் வென்றிருக்காத நிலையில் நிச்சயம் அவர் பேயர்ன் மூனிச் போவதைப் பற்றி ஆலோசிப்பார் என்றே பேசப்படுகிறது.

280 கோல்கள்! 3 முறை கோல்டன் பூட் விருது!

ஹேரி கேன் - சம கால கால்பந்தின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கர்களில் ஒருவர். 29 வயதான அவர், 2009ம் ஆண்டு டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியில் இணைந்தார். 2013-14 சீசனில் அந்த அணியின் முன்னணி ஃபார்வேர்ட்கள் பெருமளவு சொதப்ப, சீனியர் டீமில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதை சரியாகப் பிடித்துக்கொண்ட அவர், விரைவிலேயே அந்த அணியின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். அடுத்த சீசனிலேயே பிரீமியர் லீகில் 21 கோல்கள் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் பிறகு அவரது வளர்ச்சி நிற்கவேயில்லை.

ஒவ்வொரு சீசனிலும் கோல் மழை பொழிந்தார் கேன். இதுவரை பிரீமியர் லீகில் 213 கோல்கள் அடித்திருக்கும் கேன், அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஒரு பிரீமியர் லீக் சீசனில் அதிக கோல்கள் அடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் கோல்டன் பூட்டை இதுவரை 3 முறை வென்றிருக்கிறார் அவர். அனைத்து தொடர்களிலும் சேர்ந்து அந்த அணிக்காக 435 போட்டிகளில் 280 கோல்கள் அடித்திருக்கிறார் அவர்.

இங்கிலாந்து ஸ்டார் வீரராக இருந்தும் கோப்பை வெல்ல முடியாத சோகம்!

கிளப் அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் ஹேரி. இங்கிலாந்து அணிக்காக இதுவரை 84 போட்டிகளில் 58 கோல்கள் அடித்திருக்கிறார். இங்கிலாந்துக்காக சர்வதேச அரங்கில் அதிக கோல்கள் அடித்திருப்பவர் அவர்தான். அதுபோக, 2018 ஃபிஃபா உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருது வென்றார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இங்கிலாந்து கால்பந்து அரங்கில் கொடிகட்டிப் பறந்துவரும் கேன், இதுவரை ஒரு கோப்பை கூட வென்றதில்லை! ஆம், இதுவரை அவர் ஒரு கோப்பை கூட வென்றதில்லை.

Harry Kane
Harry Kane

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி பிரீமியர் லீக், FA கப், லீக் கப், சாம்பியன்ஸ் லீக், யூரோபா லீக் என எதையுமே இந்தக் காலகட்டத்தில் வெல்லவில்லை. ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கும், ஒரு முறை லீக் கப் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அவ்வளவுதான். இங்கிலாந்து அணிக்காகவும் அவரால் எதுவும் வெல்ல முடியவில்லை. 2018 உலகக் கோப்பையின் அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து, யூரோ 2020 தொடரின் இறுதிப் போட்டியில் பெனால்டி வரை சென்று தோற்றது. இப்படி ஒரு மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருப்பது எப்போதுமே ஒரு பேசுபொருளாக இருந்துவந்திருக்கிறது.

ஹேரியை வாங்க முயலும் பேயர்ன் மூனிச்! என்ன காரணம்?

இந்நிலையில் இப்போது பேயர்ன் மூனிச் ஹேரி கேனை வாங்க முயற்சி செய்து வருகிறது. சுமார் 80 மில்லியன் யூரோக்களுக்கு அவரை வாங்க அந்த அணி முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரை விற்க டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ராபர்ட் லெவண்டோஸ்கியின் இடத்தை கடந்த ஆண்டு நிரப்பாததால் அந்த அணி பெருமளவு தடுமாறியது. அதனால் நிச்சயம் கேனை வாங்கிட வேண்டும் என்பதில் பேயர்ன் மூனிச் அணி உறுதியாக இருக்கிறது.

கேன் ஒரு ஸ்டிரைக்கர் மட்டும் கிடையாது. அவரால் நன்றாக கீழே இறங்கி வந்து அட்டாகிங் வீரர்களான வெளியும் வாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்க முடியும். அது பேயர்ன் மூனிச்சின் ஸ்டைலுக்கு நன்றாகப் பொருந்தும். அதனால், மற்ற வீரர்களை விட அவரே சரியான சாய்ஸ் என்று அந்த அணி நினைக்கிறது. ஆனால், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியிடமிருந்து அவரை வாங்கிவிடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

டாட்டன்ஹாம் அணியின் நிர்வாகியும்..ஹேரி கேனின் கோப்பை கனவும்!

பேயர்ன் மூனிச் என்றில்லை. எந்த கிளப்புமே டாட்டன்ஹாம் நிர்வாகத்தோடு வியாபாரம் செய்வது எளிதல்ல. அந்த அணியின் உரிமையாளர் ரிச்சர்ட் லெவி இரும்புக் கரம் கொண்ட நிர்வாகி என்று கருதப்படுபவர். ஒருசில அணிகள் தங்களின் வீரர்கள் அந்த அணியில் நீடிக்க விரும்பாவிட்டால், அந்த வீரரின் விருப்பத்தை மதித்து அவரை விற்றுவிடுவார்கள். ஆனால் லெவி அப்படியில்லை. இதற்கு முன்பே ஓரிரு முறை ஹேரியை வாங்க ஒருசில அணிகள் முயற்சி செய்திருக்கின்றன. அவரும் கோப்பைகள் வெல்லவேண்டும் என்பதற்காக பெரிய அணிகளுக்குப் போக நினைத்திருக்கிறார். ஆனால், லெவி அவரை விட்டதேயில்லை.

ஆனால் இந்த முறை எப்படியேனும் வெளியேறிவிட வேண்டும் என்று ஹேரியும் எதிர்பார்த்திருக்கிறார். இந்த சீசனும் ஸ்பர்ஸ் ஏதும் கோப்பை வெல்லும் என்று உத்திரவாதம் கிடையாது. புதிய பயிற்சியாளராக ஆஞ்சி போஸ்டகாக்லூ பதவியேற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அணியிலும் சிலபல மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புதிய செட் அப்போடு களமிறங்கப்போகும் அந்த கிளப்புக்கு, ஹேரி கேன் கேப்டனாகவும் வாய்ப்பு இருக்கிறது. கேப்டன் ஹூகோ லோரிஸ் அணியிலிருந்து வெளியேறப்போகிறார். அவர் வெளியேறினால் ஹேரி கேன் தான் கேப்டனாவார். ஆனால் அதைவிட கோப்பைகள் வெல்வது தான் அவருக்கு பிரதானமாக இருக்கும். இருந்தாலும் எதுவும் அவர் கையில் இல்லையே. எல்லாம் லெவியின் கையில் தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com