மெஸ்ஸியை பார்க்க Honeymoon-ஐ ரத்துசெய்த ரசிகை.. கொல்கத்தாவில் புதுமண ஜோடி நெகிழ்ச்சி!
மெஸ்ஸியை பார்க்க ஹனிமூனை ஒத்திவைத்த புதுமண ஜோடி கொல்கத்தாவில் நெகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றது. 14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த மெஸ்ஸி, அவரது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றார். மெஸ்ஸியின் 70 அடி சிலை திறப்பு நிகழ்ச்சியில், ரசிகர்கள் அவரை காண மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர்.
கால்பந்து விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் மெஸ்ஸி, தேசம் கடந்து பல்வேறு உலக ரசிகர்களை கொண்டுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல்முறையாக கால்பந்து உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் மெஸ்ஸி, 17 வருட போராட்டத்திற்கு பிறகு உலகக்கோப்பையை முத்தமிட்டார். அவருடைய நம்பமுடியாத ஆட்டத்திறனுக்கு இந்தியாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்தசூழலில் 2011-க்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்திருக்கும் மெஸ்ஸியை பார்க்க, இந்தியாவிலிருக்கும் கால்பந்து ரசிகர்கள் தங்களுடைய அனைத்து பயணங்களையும் தள்ளிவைத்துவிட்டு வந்துள்ளனர். அதில் திருமணமாகி சில நாட்களே ஆன புதுமண ஜோடி ஒன்று மெஸ்ஸியை பார்க்க தங்களுடைய ஹனிமூனை ரத்துசெய்துவிட்டு வந்ததாக எழுதப்பட்ட பதாகையை வைத்திருந்தது கவனம்பெற்றது.
மெஸ்ஸியின் சிலை திறப்பு..
மூன்று நாள் பயணமாக இந்திய வந்திருக்கும் கால்பந்துவீரர் மெஸ்ஸி, சனிக்கிழமையான இன்று அதிகாலை 2:30 மணிக்கு கொல்கத்தாவை வந்தடைந்தார். இந்த 3 நாள் சுற்றுப்பயணத்தில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது தில்லி ஆகிய நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி பங்கேற்க உள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்து ஜாம்பவான் இந்தியா வந்திருக்கும் நிலையில், அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவின் லேக் டவுனில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் நிறுவப்பட்ட மெஸ்ஸியின் 70 அடி சிலை இன்று திறந்துவைக்கப்பட்டது. இச்சிலை திறப்பு நிகழ்விற்கு வரும் மெஸ்ஸியை காணகுவிந்த ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் சமீபத்தில் திருமணமான ரசிகை ஒருவர் அவருடைய ஹனிமூனை ரத்துசெய்துவிட்டு வந்ததாக பதாகையை வைத்திருந்தார்.
அந்த ரசிகை பேசுகையில், "ஆம், அதை எழுதியது நான்தான். கடந்த வெள்ளிக்கிழமை தான் நான் திருமணம் செய்து கொண்டேன், ஆனால் மெஸ்ஸி எங்கள் நகரத்திற்கு வருவதால் என் கணவரும் நானும் எங்கள் ஹனிமூனை ஒத்திவைக்க முடிவு செய்தோம்” என கூறினார்.
மேலும், மெஸ்ஸிக்கு நான் 2010-லிருந்து ரசிகையாக இருக்கிறேன், அவர் 2011ஆம் ஆண்டு இங்கு வந்தார். அப்போது நாங்கள் சிறுவர்களாக இருந்தோம், எப்போவாது தான் இங்கு வருகிறார். இந்தமுறை அவரை பார்த்துவிட வேண்டும் என முடிவுசெய்து வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.
மெஸ்ஸி கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நட்புபோட்டியில் வெனிசுலாவுக்கு எதிராக விளையாடினார். அப்போட்டியில் வெனிசுலாவை அர்ஜென்டினா 1-0 என தோற்கடித்தது.

