\

இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா அணிகள் உலகக்கோப்பையில் இதுவரை 5 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 3 முறையும், அர்ஜெண்டினா 2 முறையும் வெற்றியை ருசித்துள்ளன. 1986 உலகக்கோப்பையின் சர்ச்சைக்குரிய காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என வெளியேற்றியது அர்ஜெண்டினா அணி.
இங்கிலாந்து அணி 1962 (3-1), 1966 (1-0), 2002 (1-0) என மூன்று உலகக்கோப்பை போட்டிகளிலும், அர்ஜெண்டினா 1986 (2-1), 1998 டிரா (4-3) பெனால்டி வெற்றி என 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன.
இரண்டு அணிகளும் இதுவரை நட்பு ரீதியிலான ஆட்டங்களையும் சேர்த்து 14 முறை மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 6 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 5 போட்டி டிரா ஆன நிலையில், அர்ஜெண்டினா 3 வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக 2005ஆம் ஆண்டு இரு அணிகள் நட்பு ரீதியிலான போட்டியில் மோதிய நிலையில், அதற்கு பிறகு 20 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் மோத உள்ளன.
இரண்டு தசாப்தங்களாக சர்வதேச கால்பந்தில் விளையாடி வரும் அர்ஜெண்டினாவின் ஜாம்பான் பிளேயர் லியோனல் மெஸ்சி, தனது நீண்ட கால சர்வதேச வாழ்க்கையில் இதுவரை ஒருமுறைகூட இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கியதில்லை. கடைசியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் மெஸ்ஸியால் விளையாட முடியாமல் போனது, அப்போது 18 வயதாக லியோனல் மெஸ்சி ஹங்கேரிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் அந்த போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக மெஸ்சி களமிறங்க உள்ளது ஆட்டத்தின் மீது இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
1986ஆம் ஆண்டு உலகக்கோப்பையானது இங்கிலாந்து-அர்ஜெண்டினாவின் காலிறுதி மோதலில் ஒரு அழிக்கமுடியாத நிகழ்வை விட்டுச்சென்றது. அர்ஜெண்டினாவின் ஜாம்பவனான மரடோனா சர்ச்சைக்குரிய ’கடவுளின் கை கோல்’-ஐ அடித்தது அந்தப்போட்டியில் தான். அவர் கையால் தட்டிவிட்ட அந்த கோல் நடுவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு 'கடவுளின் கையால்’ அடிக்கப்பட்டது என்று மரடோனா கூறியது வரலாற்றில் அழியாத சம்பவமாக பதிவானது.
1986 உலகக்கோப்பையில் "Hand of God" கோல் அடிக்கப்பட்ட அதே போட்டியில் தான், நூற்றாண்டின் சிறந்த கோலையும் மரடோனா அடித்திருந்தார். மிட் ஃபீல்டிலிருந்து 68 மீட்டர்கள் தனியாளாக, இங்கிலாந்தின் ஸ்டார் வீரர்களை எல்லாம் கடந்து எடுத்துச்சென்று, தன்னுடைய அபாரமான நகர்த்தலின் மூலம் கோலாக்கியது காலத்தால் அழிக்க முடியாத கோலாக வரலாற்றில் பதிவானது. அந்த தருணம் மைதானத்தில் என்ன நடந்தது, கால்பந்துக்கும் மரடோனாவுக்கும் இடையே யாரும் இல்லையா என்ற பிரம்மிப்பு ஒவ்வொரு கால்பந்து ரசிகருக்கும் இப்போதும் இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது..
இங்கிலாந்துக்கு எதிரான புகழ்பெற்ற 1986, 1998 உலகக்கோப்பை வெற்றிகளில் அணிந்திருந்த அதே அடர் நீல நிற ஜெர்சியை தற்போதைய உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினா அணியவிருக்கிறது. அர்ஜெண்டினாவின் இந்த கோரிக்கைக்கு ஃபிபா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இதை ஒரு மூடநம்பிக்கை நகர்வாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.