மெஸ்ஸியோடு இணைந்த முக்கிய 2 பார்சிலோனா வீரர்கள்! புதிய அத்யாயத்தை தொடங்கும் இன்டர் மியாமி அணி!

லயோனல் மெஸ்ஸி, செர்ஜியோ பொஸ்கிட்ஸ் ஆகியோருக்கு அடுத்து ஜொர்டி ஆல்பாவை ஒப்பந்தம் செய்யவிருக்கிறது இன்டர் மியாமி அணி. அடுத்த MLS சீசனில் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறது டேவிட் பெக்கமின் டீம்!
Inter Miami - leo Messi
Inter Miami - leo MessiTwitter

அமெரிக்காவில் மெஸ்ஸி ஃபீவர்! பார்சிலோனா நட்சத்திர வீரர்களை தட்டித்தூக்கிய மியாமி!

இன்டர் மியாமி - அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) தொடரில் பங்கேற்கும் கிளப். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கவனத்தையும் திருப்பியது இன்டர் மியாமி. லயோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் தொடரமாட்டார் என்ற அறிவிப்பு வெளியானபோது அவர் பார்சிலோனாவுக்குச் செல்வார் என்று தான் பலரும் எதிர்பார்த்தனர். அது இழுத்துக்கொண்டே போக, சவுதி அரேபிய அணிகள் அவருக்கு வலை விரிக்கத் தொடங்கின. ஆண்டுக்கு சுமார் 200 - 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாகக் கொடுக்கத் தயாராக இருந்தன.

பார்சிலோனா எப்படியும் அவரை மீண்டும் லா லிகாவுக்கு அழைத்து வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் இன்டர் மியமியில் இணையப் போகிறார் என்ற செய்தி வெளியானது. கடந்த சில ஆண்டுகளாக பெக்கம், மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற நட்சத்திர வீரர்களை தன் அணிக்கு ஒப்பந்தம் செய்யத் திட்டமிடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இருந்தாலும் சவுதியின் பண பலத்தை இன்டர் மியாமி வென்றது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

ஆனால் பெக்கமின் அணி அதோடு நின்றுவிடவில்லை. பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் முடிந்திருந்த அந்த அணியின் கேப்டன் செர்ஜியோ பொஸ்கிட்ஸையும் கையெழுத்திட்டிருக்கிறது. இப்போது அடுத்ததாக முன்னாள் பார்சிலோனா துணைக் கேப்டன் ஜோர்டி ஆல்பாவையும் அந்த அணி ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இப்படி அட்டாக், மிட்ஃபீல்ட், டிஃபன்ஸ் என ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு சூப்பர் ஸ்டார் வீரரை ஒப்பந்தம் செய்திருக்கிறது இன்டர் மியாமி. அவர்கள் மூவருமே பார்சிலோனாவின் தூண்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளரும் பார்சிலோனாவிலிருந்து!

முந்தைய சீசனின் கடைசி கட்டத்தில் பயிற்சியாளர் ஃபில் நெவிலை பதவியிலிருந்து வெளியேற்றியது இண்டர் மியாமி. அவருக்குப் பதிலாக அர்ஜென்டினாவின் ஜெரார்டோ மார்டினோவை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தது. இவர் 2013-14 சீசனில் பார்சிலோனாவின் மேனேஜராக இருந்தார். அப்போது மெஸ்ஸி, பொஸ்கிட்ஸ், ஆல்பா ஆகிய மூன்று வீரர்களுமே பார்சிலோனாவுக்காக விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த லா லிகா சீசனின் கடைசிப் போட்டியில் அத்லெடிகோவை வென்றிருந்தால், பார்சிலோனா லீக் சாம்பியனாகியிருக்கும். ஆனால், போட்டி டிரா ஆக, பார்சிலோனா இரண்டாவது இடமே பிடித்தது. அதனால், அந்த சீசன் முடிவிலேயே அவர் பதவியிலிருந்து விலகினார். அந்த சீசனில் வேறு எந்த கோப்பையையுமே அந்த அணி வெல்லவில்லை.

அதன்பிறகு அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் ஆனார் மார்டினோ. மீண்டும் மெஸ்ஸியோடு இணைந்தார். அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் (2015, 2016) கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது அர்ஜென்டினா. ஆக, மார்டினோ, மெஸ்ஸி இருவரும் இணைந்து இதுவரை எந்த கோப்பையையும் வென்றதில்லை! இருந்தாலும் அமெரிக்காவில் இந்த சூப்பர் ஸ்டார் வீரர்களை வைத்து ஒரு புதிய அத்தியாத்தைத் தொடங்க முனையும் இன்டர் மியாமி, அதில் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த வீரர்கள் அடுத்த 2-3 ஆண்டுகள் அவர்களது 60% திறமையைக் காட்டும் பட்சத்தில் அந்த அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இன்டர் மியாமி உருவான கதை! பிரபலமில்லாத அணியில் இணைந்த நட்சத்திர வீரர்!

கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கம் அமெரிக்க தொழிலதிபர்களோடு இணைந்து இந்த கிளப்பை 2018-ஆம் ஆண்டு தொடங்கினார். அவர் இந்த கிளப்பை தொடங்கியதற்குப் பின் ஆச்சர்யமான ஒரு கதை உண்டு. 2007ம் ஆண்டு, ரியல் மாட்ரிட் அணியுடனான ஒப்பந்தம் முடிந்ததும் தன் 32வது வயதிலேயே LA கேலக்ஸி அணியில் இணைந்தார் டேவிட் பெக்கம்.

beckham
beckham

அதுவரை பெரிதும் பிரபலமடையாத அமெரிக்க கிளப் ஒன்றுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் இணைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அதன்பிறகு AC மிலன் அணிக்கு லோன் செய்யப்பட்டது ஒருபுறமிருந்தாலும், அவருடைய ஒப்பந்தமே வித்தியாசமானது. பெக்கம் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் தங்கள் லீகில் இணைந்தால், அது உலக அளவில் பெரிய விளம்பரமாய் இருக்கும் என்று நினைத்த MLS நிர்வாகம், அவருக்கு ஒரு பெரிய வாக்குறுதி கொடுத்தது.

messi - inter miami
messi - inter miamiTwitter

அதாவது, அவர் LA கேலக்ஸிக்கு கையெழுத்திடும் பட்சத்தில், அந்த தொடர் விரிவடையும்போது ஒரு புதிய அணியை சற்று குறைந்த தொகைக்கு (25 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வாங்கலாம் என்று அவரது ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் 2018-ம் ஆண்டு MLS விரிவாகம் நடந்தபோது இன்டர் மியாமி அணியை வாங்கினார் பெக்கம். மெஸ்ஸிக்கும் அப்படியொரு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com