தொடங்கியது மகளிர் உலகக் கோப்பை... ஸ்பெய்ன், அமெரிக்கா வெற்றித் தொடக்கம்
2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தொடங்கியிருக்கிறது. கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாகக் கருதப்படும் ஸ்பெய்ன், அமெரிக்கா அணிகள் வெற்றியோடு தங்கள் தொடரைத் தொடங்கியிருக்கின்றன. முதல் நாளில், முன்னணி அணியான நார்வேவை வீழ்த்தி இந்த உலகக் கோப்பைக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தது நியூசிலாந்து!
2023 பெண்கள் உலகக் கோப்பை மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறுகின்றன. இத்தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இது ஒன்பதாவது பெண்கள் உலகக் கோப்பை தொடர். பெண்கள் கால்பந்தில் கொடிகட்டிப் பறக்கும் அமெரிக்கா தான் இந்தத் தொடரை அதிக முறை வென்றிருக்கிறது. 1991ல் முதல் பெண்கள் உலகக் கோப்பையை வென்ற அமெரிக்கா, 1999, 2015, 2019 என மொத்தம் 4 முறை உலக சாம்பியன் ஆகியிருக்கிறது. மற்ற 4 தொடர்களில், ஒரு முறை இரண்டாவது இடமும், மூன்று முறை மூன்றாவது இடமும் பெற்றிருக்கிறது அந்த அணி. ஆக, 8 உலகக் கோப்பைகளிலும் குறைந்தபட்சம் அரையிறுதி வரையாவது முன்னேறியிருக்கிறது அமெரிக்கா. ஜெர்மனி இரு முறையும், ஜப்பான், நார்வே அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன.
இந்தத் தொடரைப் பொறுத்தவரை ஃபிளிப்பைன்ஸ், வியட்நாம், மொராக்கோ, ஜாம்பியா, ஹைதி, பனாமா, போர்ச்சுகல், அயர்லாந்து என 8 அணிகள் முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. ஆண்கள் கால்பந்தில் கோலோச்சினாலும், போர்ச்சுகலைப் பொறுத்தவரை இப்போதுதான் பெண்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றிருக்கிறது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் இப்போதுதான் உலகக் கோப்பைக்குத் திரும்பியிருக்கிறது. கடந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாத கோஸ்டா ரிகா, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து அணிகள் இம்முறை மீண்டும் உலகக் கோப்பைக்குத் திரும்பின. ஆண்கள் உலகக் கோப்பையை தொடர்ந்து இரு முறை தவறவிட்ட இத்தாலி, தங்கள் வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பைக்கு தொடர்ந்து இரு முறை தகுதி பெற்றிருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி 20ம் தேதி ஆக்லாந்தில் தொடங்கியது. இந்தப் போட்டிக்கு சில மணி நேரங்கள் முன்பு ஆக்லாந்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தேறியது. ஆக்லாந்து நகரின் மையப் பகுதியில் ஒரு கட்டிட வேலை நடந்துகொண்டிருந்த இடத்தில் ஒரு நபர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். நியூசிலாந்து நேரப்படி காலை 7 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தால் மொத்த உலகமும் அதிர்ச்சிக்குள்ளானது. துப்பாக்கிச்சூடு நடத்தியவன் உள்பட மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் நடந்திருந்தாலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திட்டமிட்டபடி போட்டி நடத்தப்பட்டது.
முதல் போட்டியில் ஹோம் டீமான நியூசிலாந்து முன்னாள் சாம்பியன் நார்வேவை சந்தித்தது. ஃபிஃபா ரேங்கிங்கில் நார்வே 12வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணியோ 26ம் இடத்தில் தான் இருக்கிறது. அதனால் நிச்சயம் நார்வே அணிதான் வெற்றி பெறும் என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இந்தப் போட்டியை நியூசிலாந்து வென்றது. 48வது நிமிடத்தில் ஹேனா வில்கின்சன் அடித்த கோல் அந்த அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இருந்தது. இதற்கு முன் 5 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றிருக்கும் நியூசிலாந்து 15 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. ஆனால் ஒரு போட்டியில்கூட வெற்றி பெற்றதில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர்களின் முதல் உலகக் கோப்பையை வெற்றியை மொத்த தேசமும் கொண்டாடித் தீர்த்திருக்கிறது.
போட்டியை நடத்தும் இன்னொரு நாடான ஆஸ்திரேலியா அயர்லாந்தை 1-0 என வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சாம் கெர் இந்தப் போட்டியில் ஆடாதது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் காயமடைந்திருப்பதாகவும், அதனால் முதலிரு லீக் போட்டிகளிலும் அவர் ஆடமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே பிரிவில் 7வது இடத்தில் இருக்கும் கனடா, 40வது இடத்தில் இருக்கும் நைஜீரியாவிடம் டிராவே செய்தது. இந்த முடிவு ஓரளவு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருப்பதால், சாம் கெர் ஓய்வு அந்த அணியைப் பெரிதாக பாதிக்காது என்று தெரிகிறது.
சி பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெய்ன் அணி கோஸ்டா ரிகாவை 3-0 என வீழ்த்தியது. முதல் பாதியில் முழு ஆதிக்கம் செலுத்திய ஸ்பெய்ன் அணி, ஒரு 7 நிமிட இடைவெளியில் 3 கோல்கள் அடித்தது. அவர்களைப் போலவே அமெரிக்க அணியும் 3-0 என வியட்நாமை வீழ்த்தியது. இரண்டு அணிகளுமே பாசிடிவாக இத்தொடரைத் தொடங்கியிருப்பது நிச்சயம் அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும்.