ஒருவழியாக “ரைஸ்” ஆனது சன் ரைசர்ஸ்! சென்னைக்கு தொடர்ந்து 4வது தோல்வி!

ஒருவழியாக “ரைஸ்” ஆனது சன் ரைசர்ஸ்! சென்னைக்கு தொடர்ந்து 4வது தோல்வி!
ஒருவழியாக “ரைஸ்” ஆனது சன் ரைசர்ஸ்! சென்னைக்கு தொடர்ந்து 4வது தோல்வி!

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 4வது தொட்ர் தோல்வியாக அமைந்தது.

ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை 16 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 17-வது ஆட்டத்தில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இரண்டு அணிகளுமே இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் (சென்னை 3, ஹைதராபாத் 2)  தோல்வியடைந்த நிலையில், முதல் வெற்றியை பதிவுசெய்யும் நோக்கில் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர். 3 ஓவர்களில் 25 ரன்கள் குவித்த இந்த ஜோடியை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டர் சுந்தர் பிரித்தார். தனது முதல் பந்திலேயே உத்தப்பாவை வெளியேற்றி அசத்தினார் சுந்தர்.

அடுத்ததாக மொயின் அலியுடன் நிதானமாக விளையாடினார் ருதுராஜ். புயல் வேகத்தில் ஒரு சரியான இன்ஸ்விங்கர் வீசினார் நடராஜன்! ருதுராஜ் கெய்க்வாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து மிஸ் ஆகி மிடில் ஸ்டம்பை நோக்கிப் பயணித்து க்ளீன் போல்டாக்கியது. இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, தோனி ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். கடைசியாக ஜடேஜா பவுண்டரிகளை விளாச 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை குவித்தது சென்னை அணி.

155 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கினர் சன்ரைசர்ஸ் ஓப்பனர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் கேன் வில்லியம்சன். இருவரும் விக்கெட் விழக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி நிதானமாக விளையாடினர். ஏதுவான பந்துகளை மட்டும் இருவரும் எல்லைக்கோட்டுக்கு விரட்ட, ரன் ரேட் 7ஐ தொட்டவாறு பயணித்தது. 12 வது ஓவர் வரை இந்த கூட்டணியை பிரிக்க இயலாமல் சென்னை பவுலர்கள் திணறினர். கடைசியாக முகேஷ் சவுத்ரி வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் அவுட்டானார். அவர் வெளியேறும் போது 89 ரன்களில் இருந்து சன் ரைசர்ஸின் ஸ்கோர்.

அடுத்ததாக களமிறங்கிய ராகுல் த்ரிபாதி அபிஷேக்குடன் இணைந்து அதிரடியாக விளையாடத் துவங்கினார். வந்த வேகத்தில் அவர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாச சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு தூள் தூளானது. மறுமுனையில் அபிஷேக் தன் பங்குக்கு ரன் வேட்டை நடத்திவிட்டு, ப்ராவோ பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். 50 பந்துகளை சந்தித்த அபிஷேக் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 75 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரான், திரிபாதியுடன் கைகோர்த்து சன் ரைசர்ஸை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 14 பந்துகளை மீதம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சன் ரைசர்ஸ். இந்த சீசனில் அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும். இந்த சீசனில் வெற்றியே காணாமல் பயணிக்கும் சென்னை அணிக்கு 4 வது தோல்வியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com