கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மறக்க முடியாத டாப் 10 தருணங்கள்

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மறக்க முடியாத டாப் 10 தருணங்கள்
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மறக்க முடியாத டாப் 10 தருணங்கள்

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுகால கனவு இந்த முறை சாத்தியமானது. ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இறுதிப்போட்டியின் மறக்க முடியாத தருணங்களை பார்க்கலாம்..

* பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, லியோனல் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரொக்குசோ, அவர்களின் குழந்தைகள், மெஸ்ஸியின் பெற்றோர் ஆகியோர் போட்டியை நேரில் காண லூசாய்ல் மைதான ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர்.

* கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி பார்வையாளர்களை நோக்கி கையசைத்து விட்டு அமர்ந்தார்.

* லுசைல் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஸ்பெயின் முன்னாள் கால்பந்து வீரரும், உலகக் கோப்பை வெற்றியாளருமான இக்கர் கேசிலாஸ் வெற்றியாளர் கோப்பையை கையில் வைத்திருந்தார்.

* இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு அணி வீரர்களும் தனித்தனியாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

* பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பளே அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியாவை பெனால்டி ஏரியாவில் ஃபவுல் செய்தார். இதனால் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி லியோனல் மெஸ்ஸி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

* மீண்டும் மெஸ்ஸி 'மேஜிக்' தொடர்ந்தது. இவர் பந்தை துடிப்பாக அலிஸ்டருக்கு அனுப்ப, அலிஸ்டர் அருமையாக ஏஞ்சல் டி மரியாவுக்கு 'பாஸ்' செய்தார். அதே வேகத்தில் டி மரியா அருமையான கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.

* இரண்டாவது பாதியில் ஆட்டம் தலைகீழாக மாறியது. பிரான்ஸ் வீரர்கள் சுதாகரித்துக் கொண்டு ஆட, அர்ஜென்டினா அணியினர் தடுமாறினர். 79வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைக்க, அதைப் பயன்படுத்தி எம்பாப்வே அருமையாக கோல் அடிக்க, அரங்கில் இருந்த பிரான்ஸ் ரசிகர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 81வது நிமிடத்தில் துராம் கொடுத்த பாஸை பெற்ற எம்பாப்வே மீண்டும் ஒரு கோல் அடித்து மிரட்டினார். இரண்டாவது பாதி முடிவில் 2-2 என சமநிலையை எட்ட ஆட்டம் சூடுபிடித்தது.  

* பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஸ்டேடியத்தில் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும் பின்னர் சோகத்தில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த தருணத்தையும் தொலைக்காட்சித் திரையில் காண முடிந்தது.

* நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படாததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.

* 109-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு நெருக்கமாக அர்ஜெண்டினாவின் மார்ட்டினெஸ் இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் லொரிஸ் தடுத்தார். அவர் மீது பட்டு திரும்பிவந்த பந்தை மெஸ்ஸி கோல் ஆக்கினார். இதனால் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

* ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய எம்பாப்வே 'ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். போட்டி 3-3 என சமநிலையை எட்டியது. கூடுதலாக கோல் அடிக்கப்படாததால் வெற்றியாளரை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு போட்டி சென்றது.

* இதில் பிரான்ஸ் அணியின் முதல் வாய்ப்பில் எம்பாப்வேவும், அர்ஜெண்டினாவின் முதல் வாய்ப்பில் மெஸ்ஸியும் கோல் அடித்தனர். 2-வது வாய்ப்பை பிரான்ஸ் வீணடிக்க, மறுபுறம்  அர்ஜெண்டினாவின் டைபலா கோல் அடித்தார். 3வது வாய்ப்பில் பிரான்ஸ் மீண்டும் சொதப்ப, அர்ஜெண்டினாவின் பரடேஸ் கோல் அடிக்க அந்த அணி 3-1 என முன்னிலை பெற்றது. 4-வது வாய்ப்பில் பிரான்ஸி கோலோ முவானி கோல் அடித்தார். அதேவேளையில் அர்ஜெண்டினா தரப்பில் கோன்சலோ மான்டியேல் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. மெஸ்சியின் உலகக் கோப்பை கனவு நனவானது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com