உலகக்கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்று மணல் சிற்பம்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர்பாக ஒடிசாவில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பன்னாட்டு கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது. தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் முதல் போட்டியில் ரஷ்ய அணி, சவுதி அரேபியாவை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி இந்திய நேரப்படி இரவு எட்டரை மணிக்குத் தொடங்குகிறது. சர்வதேச கால்பந்து தரவரிசையில் 70ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவும், 67ஆவது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவும் மோதயுள்ள இப்போட்டியில் சவுதி அரேபியாவை விட தரவரிசையில் சற்று பின்தங்கியுள்ளபோதிலும், சொந்த மண்ணில் விளையாடுவது ரஷ்ய அணிக்கு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர்பாக மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அமைதி மற்றும் நட்புக்கான பந்து என்று என்ற தலைப்பில் இதனை வடிவமைத்துள்ளார். கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மணல் சிற்பத்தின் முன்பு நின்று, ஆர்வமுடன் செல்பி எடுத்துச் செல்கின்றனர். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகளுக்கும் வாழ்த்துக் கூறுவதாகவும், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இந்த மணல் சிற்பத்தை அர்ப்பணிப்பதாகவும் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.