வெற்றி நடையை தொடருமா சிஎஸ்கே? ஹைதராபாத்துடன் இன்று மோதல்
தோனி தலைமையிலான பலம் வாய்ந்த சென்னை அணியை இன்று டெல்லியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சந்திக்கிறது ஹைதராபாத் அணி.
இந்தத் தொடரில் சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றிப்பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆம் இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. கடந்தப் போட்டியில் டெல்லி அணியுடன் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியடைந்தது.
சென்னையை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது பலம். ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா ஆர்சிபி அணியுடனான கடந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். அதேபோல சாம் கரனும் தனக்கான பங்கை நிறைவேற்றுகிறார்.
பவுலிங்கை பொறுத்தவரை தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிரும் அருமையாக பந்துவீசுகின்றனர். இதுவரை சிஎஸ்கே அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சனையும் பெரிதும் நம்பி இருக்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே ஹைதராபாத் அணி வெளிநாட்டு வீரா்களையே நம்பியிருக்கிறது.
மிக முக்கியமாக பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், ரஷீத் கானையுமே மலையென நம்பியிருக்கிறது. ஹைதராபாதை பொறுத்தவரை இந்தப் போட்டியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது.