சோயிப் மாலிக்கை சிறப்பாக வழியனுப்புவோம் - வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் சோயிப் மாலிக். இவர் 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7534 ரன்கள் குவித்துள்ளார். 44 அரைசதம், 9 சதம் அடித்துள்ளார். அத்துடன், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 158 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 19 முறை 4 விக்கெட் சாய்த்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில்தான் சோயிப் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவரும் இடம்பெற்றிருந்தார். 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஒருசில போட்டிகளில்தான் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த உலகக் கோப்பை அவருக்கு சரியான ஒன்றாக அமையவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில்தான் அவர் கடைசியாக விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப் போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், சோயிப் மாலிக்கின் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு சிறப்பாக முடியவில்லை எனினும் அவரை சிறப்பாக வழியனுப்புவோம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த தொடர் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள சரியான நேரம் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அவர் நிறையவே செய்திருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. இரண்டு முறை அவர் டக் அவுட் ஆனார். இது எந்த வீரருக்கும் இதுபோல் நடப்பது வழக்கம். அவர் நிறைய செய்திருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் ஒரு சிறப்பான மனிதர். அவரை சிறப்பாக வழியனுப்புவோம். அவர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாட முடியவில்லை என்பது எனக்கு தெரியும். பாகிஸ்தான் அணிக்காக சிறந்த பங்களிப்பு ஆற்றியுள்ள சோயிப் மாலிக்கிற்கு ஒரு ஃபேர்வெல் பார்ட்டி எடுப்போம்” என்று கூறியுள்ளார்.