இதுக்கு பேர் தான் 'கர்மா': விராட் கோலியை நீக்கிய பாணியில் சேத்தன் சர்மா நீக்கம்

இதுக்கு பேர் தான் 'கர்மா': விராட் கோலியை நீக்கிய பாணியில் சேத்தன் சர்மா நீக்கம்
இதுக்கு பேர் தான் 'கர்மா':  விராட் கோலியை நீக்கிய பாணியில் சேத்தன் சர்மா நீக்கம்

சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை கலைக்கப்பட்டுள்ளதை விராட் கோலி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி இருந்தது இந்திய அணி. இதனால் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை கூண்டோடு நேற்று கலைத்தது பிசிசிஐ.

கடந்த 2020-ஆம் ஆண்டில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையில் தேர்வுக் குழு உருவாக்கப்பட்டது.  சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மீது விமர்சனம் இருந்தது. இச்சூழலில்தான் இந்தக் குழுவை கூண்டோடு கலைத்துள்ளது பிசிசிஐ. மேலும் தேர்வு குழுவுக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 28 வரை காலக்கெடு என்றும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவை கலைக்கப்பட்டுள்ளதை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். காரணம் இந்த குழு விராட் கோலியிடம் நடந்து கொண்ட விதம்தான்.

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் தொடர்ந்து கேப்டனாக இருப்பேன் என்று கூறினார். ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்பு கோலி அதிரடியாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இது விராட் கோலி ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விராட்  கோலியிடம் ஆலோசித்து விட்டுத்தான் இந்த முடிவை எடுத்ததாக சேத்தன் சர்மா கூறினார். மேலும், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என தனிப்பட்ட முறையில் விராட் கோலியை கேட்டுக்கொண்டதாக அப்போதைய பிசிசிஐ  தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால் கோலியோ, என்னை யாருமே தொடர்பு கொள்ளவில்லை; ஊடகச் செய்தியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். கங்குலி, சேத்தன் சர்மா, விராட் கோலி ஆகியோரின் மாறுபட்ட கருத்து காரணமாக அவர்களுக்கு இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்வு நடந்து ஓராண்டு கூட ஆகாத சூழலில், விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய பாணியில், சேத்தன் சர்மா தற்போது  நீக்கப்பட்டுள்ளார். இதனை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: டிராவிட்டுக்கு எதற்கு அடிக்கடி ஓய்வு? -ரவி சாஸ்திரியின் விமர்சனத்திற்கு பதிலளித்த அஸ்வின்









Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com