டெக்ஸா சோதனையில் தேறினால்தான் இனி இந்திய அணியில் இடம் - டெக்ஸா என்றால் என்ன தெரியுமா?

டெக்ஸா சோதனையில் தேறினால்தான் இனி இந்திய அணியில் இடம் - டெக்ஸா என்றால் என்ன தெரியுமா?
டெக்ஸா சோதனையில் தேறினால்தான் இனி இந்திய அணியில் இடம் - டெக்ஸா என்றால் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடல் தகுதியை உறுதி செய்யும் டெக்ஸா டெஸ்ட் என்று புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2022 சுமாரான ஆண்டாக அமைந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதி சுற்றை கூட எட்டவில்லை. டி20 உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி எந்த உலகக் கோப்பையையும் வெல்லவில்லை.

இந்த நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் மும்பையில் நேற்று ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி இந்திய அணி தேர்வில் மீண்டும் யோ-யோ உடல்தகுதி சோதனை கொண்டு வரப்படுகிறது. அத்துடன் டெக்சா சோதனையும் புதிதாக நடைமுறைப்படுத்த உள்ளது. இனி இந்திய அணியில் ஒரு வீரர் இடம் பிடிக்க வேண்டும் என்றால் யோ-யோ மற்றும் டெக்சா சோதனையில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டெக்சா சோதனை எதற்கு?

டெக்சா என்பது எலும்பு உறுதியாக உள்ளதா? என்பதை ஸ்கேன் மூலம் அறிவதாகும். இது எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதாவது திண்ம அளவை  அளக்கும் பரிசோதனை ஆகும். இந்த பரிசோதனை இடுப்பு மற்றும் முதுகு எலும்புகளுக்குள் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி எடுக்கப்படுகிறது. இதன் கதிர்வீச்சு அளவு மிகவும் குறைவு என்பதால், இதை அடிக்கடி எடுத்தாலும் பக்கவிளைவு ஏற்படுவதில்லை. 10 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும். வலி எதுவுமில்லாமல் இருப்பது, இதன் கூடுதல் பலன். எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவை இது சொல்லிவிடும். டெக்சா சோதனை முடிவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம்.

யோ-யோ டெஸ்ட் என்றால் என்ன?

அணி வீரர்கள் உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்வதற்கான சோதனைதான் யோ-யோ டெஸ்ட்.  இது பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. 20 மீட்டர் நீளமுள்ள இடத்தைத் தேர்வுசெய்து, 20 மீட்டரின் தொடக்கத்தை ஆரம்ப புள்ளியாகவும், அதன் இறுதியை முடிவு புள்ளியாகவும் குறித்துக் கொள்வார்கள். யோ-யோ டெஸ்ட்டில் பங்குபெறும் வீரர் இந்த 20 மீட்டரின் ஆரம்ப மற்றும் முடிவு புள்ளிகளை ஓடிச்சென்று மாறி, மாறி தொட்டு வர வேண்டும். குறிப்பிட்ட வினாடிகளில் எத்தனை முறை அந்த இரண்டு புள்ளிகளையும் தொட்டு வர முடிகிறது என்பதைப் பொறுத்து அதில் கலந்துகொண்ட வீரருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

யோ-யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா ஸ்கேன் போன்ற சோதனைகளில் தேறும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இந்த இரு முறைகளும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டால் 30 வயதுக்கு மேல் உள்ள வீரர்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய முறை வரும் தொடரிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக் முன்பு ஒருமுறை “நாங்கள் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடிய போது யோ-யோ டெஸ்ட் இருந்திருந்தால் கங்குலி, சச்சின், லக்ஷமண் மாதிரியான வீரர்கள் அணியில் விளையாட தேர்வாகி இருக்க மாட்டார்கள்” என சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com