குறுகிய காலத்திலேயே முன்னணி கால்பந்து அணியாக மாறிய குரோஷியா; மேஜிக் நிகழ்த்துவாரா மோட்ரிச்

குறுகிய காலத்திலேயே முன்னணி கால்பந்து அணியாக மாறிய குரோஷியா; மேஜிக் நிகழ்த்துவாரா மோட்ரிச்
குறுகிய காலத்திலேயே முன்னணி கால்பந்து அணியாக மாறிய குரோஷியா; மேஜிக் நிகழ்த்துவாரா மோட்ரிச்

குரோஷியா - யாரும் எதிர்பாராத வகையில் கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை நுழைந்த அந்த அணி, இம்முறை இன்னும் ஒரு படி மேலே போகக் காத்திருக்கிறது. அந்த உலகக் கோப்பைக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் அணி, இம்முறை நிச்சயம் இறுதிப் போட்டியைக் குறிவைக்கும். இந்தத் தொடரில் அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம், பலவீனம் என்ன? அந்த அணியின் நம்பிக்கை யார்?

பயிற்சியாளர்: ஸ்லாட்கோ டாலிச்
FIFA ரேங்கிங்: 12
2022 உலகக் கோப்பை பிரிவு: F
பிரிவில் இருக்கும் அணிகள்: பெல்ஜியம், கனடா, மொராக்கோ

உலகக் கோப்பையில் இதுவரை: 

குரோஷியாவுக்கு இது ஆறாவது உலகக் கோப்பை தொடர். 1998ல் தான் முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றது அந்த அணி. முதல் உலகக் கோப்பையிலேயே அரையிறுதி வரை முன்னேறி மொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தத் தொடரில் மூன்றாவது இடமும் பிடித்தது குரோஏஷியா. 2002, 2006 தொடர்களில் குரூப் சுற்றோடு வெளியேறிய அந்த அணி, 2010 உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெறவே தவறியது. 2014ல் மீண்டும் குரூப் பிரிவிலேயே வெளியேறியது. 2018ல் மிகச் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை வந்தது அந்த அணி.

தகுதிச் சுற்று செயல்பாடு:

குரோஷியாவின் 2022 உலகக் கோப்பை தகுதிச் சுற்றி எதிர்பார்த்ததைப் போல் செல்லவில்லை. கடைசி போட்டி வரை பரபரப்பாகவே இருந்தது. அந்தப் பிரிவில் இருந்த ரஷ்யா இவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. ரஷ்யாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக உலகக் கோப்பைக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை. டிரா செய்தாலும் கூட ரஷ்யா அந்த இடத்தைப் பெற்றிருக்கும். ஒருவழியாக 81வது நிமிடத்தில் கிடைத்த ஓன் கோல் காரணமாக புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றது குரோஷியா. இல்லாவிட்டாலும், பின்பு ரஷ்யா தடை செய்யப்பட்டதால் அந்த அணி எப்படியும் உள்ளே நுழைந்திருக்கும்.

பயிற்சியாளர்: 

கடந்த ஐந்து ஆண்டுகளாக குரோஷியாவை உலகின் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றாக மாற்றியிருக்கிறார் ஸ்லாட்கோ டாலிச். கடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை அந்த அணியை அழைத்துச் சென்றவர், இந்த சீசனின் UEFA நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கும் குரோஷியாவை வழிநடத்தியிருக்கிறார். அணி முழுவதும் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இருந்தாலும், இருக்கும் சூப்பர் ஸ்டார்களை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று இவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. மோட்ரிச், பெரிசிச் போன்ற வீரர்களுக்கு ஏற்றவாறு அந்த அணியின் ஸ்டைலை இவர் அமைக்க, ஜொலித்துக்கொண்டிருக்கிறது குரோஷியா.

பலம்:

குரோஷியா அணி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறது. நேஷன்ஸ் லீக் தொடரில் டென்மார்க், பிரான்ஸ், ஆஸ்திரியா அணிகள் இருந்த கடினமான பிரிவில் இருந்த குரோஷியா அணி, 13 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. அரையிறுதிக்கும் முன்னேறியிருக்கிறது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வென்றிருக்கிறது. கடைசி 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருக்கிறது. இதுவே அவர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுக்கும். லூகா மோட்ரிச், மாடியோ கோவசிச், மார்சலோ புரோசோவிச், இவான் பெரிசிச், ஆண்ட்ரே கிரமாரிச் என அனுபவ வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய தொடரில் ஒரு அணியின் செயல்பாடு அவர்களின் நடுகளத்தைப் பொறுத்ததுதான். மோட்ரிச் - கோவசிச் - புரோசிவிச் அடங்கிய நடுகளம் உலகின் மிகச் சிறந்த நடுகளங்களுள் ஒன்று.

பலவீனம்:

மாண்ட்சுகிச் போன்ற ஒரு கோல் ஸ்கோரர் இல்லாதது அந்த அணிக்கு பாதகமான விஷயம். பல வீரர்களுக்கு இதுவே முதல் உலகக் கோப்பையாக அமைந்திருக்கிறது. 2018 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து எதிரான ஸ்டார்டிங் லெவனில் இடம் பிடித்திருந்த வீரர்களில் ஐந்து பேர் மட்டுமே இந்த தொடரில் இடம் பெற்றிருக்கிறார்கள். அனுபவ வீரர்கள் அதிக நெருக்கடியை சுமக்கவேண்டியதாக இருக்கும்.

நம்பிக்கை நாயகன்:

லூகா மோட்ரிச். நடுகளத்தில் வித்தை காட்டும் நாயகன், இந்த ஆண்டும் குரோஷியாவுக்காக மாயங்கள் நிகழ்த்தலாம். கடந்த உலகக் கோப்பை தொடரில் கோல்டன் பால் விருதை வென்றவர், இந்த முறை அந்தத் தங்கக் கோப்பையை வெல்லத் துடிப்பார். இந்த 4 ஆண்டுகளில் அவர் கேமும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை. ரியல் மாட்ரிட் அணிக்காக இன்னும் போட்டிகளின் முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். சமீபமாக மாட்ரிட் அணிக்கான அவருடைய ஆட்ட முறையும் ஓரளவு குரோஷியாவுக்கு ஏற்றது போலவே மாறியிருக்கிறது. எனவே நிச்சயம் அவரது 100 சதவிகித திறமையை கத்தாரில் காட்டுவார்.

வாய்ப்பு:

குரூப் சுற்றில் பெல்ஜியம் அணி குரோஏஷியாவுக்கு சவாலாக இருக்கும். அதைத் தாண்டினாலும் ஸ்பெய்ன் அல்லது ஜெர்மனியில் ஏதோவொரு அணியை அடுத்த சுற்றில் சந்திக்கவேண்டியதாக இருக்கும். காலிறுதிக்குத் தகுதி பெறுவது கடினம் தான். இருந்தாலும், கடந்த ஆண்டைப் போல் மாயங்கள் நிகழ்ந்தாலும் நிகழலாம் அல்லவா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com