இந்தியாதான் மேட்ச் பிக்சிங் மாஃபியாவின் ஒட்டுமொத்த கூடாரம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அக்யூப் ஜாவித் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பல ஆண்டுக்காலம் கிரிக்கெட் விளையாடத் தடை பெற்றுள்ளனர். அண்மையில் கூட பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல் மீது மேடச் பிக்சிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர், மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசியுள்ளார். அதில் இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அக்யூப் ஜாவித் "கடந்த கால ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் கேட்கப்பட்டன. ஆனால் அது குறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மேட்ச் பிக்சிங் மாஃபியாக்களின் கூடாரம் இந்தியாதான் என்று நினைக்கிறேன். மேலும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது அதை ஊக்கப்படுத்துவதாக அமையும். மேட்ச்-பிக்சிங்கிற்கு எதிராக இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை காயத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்யூப் ஜாவத் பாகிஸ்தானுக்காக 22 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 163 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர். 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.