விளையாட்டு
'கேப்டன்சி சர்ச்சை; கங்குலி விளக்கம் தரவும்..' - பாக். முன்னாள் கேப்டன் விமர்சனம்
'கேப்டன்சி சர்ச்சை; கங்குலி விளக்கம் தரவும்..' - பாக். முன்னாள் கேப்டன் விமர்சனம்
இந்திய அணியின் ஒயிட்-பால் கேப்டன்சியில் நிலவும் சர்ச்சைகள் குறித்து கங்குலி பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இரு வித 'ஒயிட் பால்' போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் இருப்பதே அணிக்கு உகந்ததாக இருக்கும் என பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவுக்கு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் விராட் கோலி கூறிய சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியை வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால் விராட் கோலியோ, ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்படுவது முன்னரே ஆலோசிக்கப்படவில்லை என தெரிவித்தார். டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என யாரும் வலியுறுத்தவில்லை எனவும் கோலி கூறினார்.
கோலி - ரோஹித் இடையே எந்த ஒரு விரிசலும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் கோலி - கங்குலி ஆகியோரின் மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சல்மான் பட் ஒரு பேட்டியில் கூறுகையில், ''கங்குலி பிசிசிஐயின் தலைவர். அவர் கோலி உடன் பகிரங்கமாக முரண்படுவது சிறிய விஷயம் அல்ல. ஒருபுறம், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக் கொண்டதாக கங்குலி கூறினார். ஆனால் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என என்னிடம் யாரும் சொல்லவில்லை என கோலி சொல்கிறார். இவை முற்றிலும் மாறுபட்ட கருத்துகள். கோலியின் கருத்து குறித்து கங்குலி செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.