நான் இளம் கிறிஸ் கெய்லா? கேட்கிறார் எவின் லெவிஸ்
என்னை, இளம் கிறிஸ் கெய்ல் என்றே எல்லோரும் அழைக்கிறார்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் எவின் லெவிஸ் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 62 பந்தில் 125 ரன் எடுத்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் எவின் லெவிஸ். இதில் 12 சிக்சர்களும் அடங்கும். அதே போட்டியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் எடுத்த ரன்கள், 18.
இந்தியாவுக்கு எதிரான மற்றொரு டி20 போட்டியில் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதில் 9 சிக்சர்களும் உண்டு. இப்போது இவரை, வெஸ்ட் இண்டீஸின் அடுத்த கிறிஸ் கெய்ல் என்று புகழ ஆரம்பித்துவிட்டார்கள். என்ன சொல்கிறார் லெவிஸ்?
’எல்லோரும் என்னை, இளம் கிறிஸ் கெய்ல் என்றே அழைக்கிறார்கள். நான் அவரைப் போலவே பேட் செய்கிறேன் என நினைக்கிறேன். நானும் கெய்லும் பலமுறை வலை பயிற்சி செய்திருக்கிறோம். அவர் எப்போதும் எனக்கு ஆலோசனைகளை சொல்வார். அதுதான் எனது கிரிக்கெட் கேரியர் வளர காரணம். போட்டிகளில் இறங்கும்போது, இந்த பந்தில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதை செய்துவிடுவேன். எனக்குத் தெரியும், சில பந்துகளை அடித்தால் அது எல்லை தாண்டும் என்று. அதை அப்படியே செய்வேன். சில நேரங்களில் நல்ல பந்துகளையும் சிக்சருக்கு விரட்டுவேன். பெரிய பந்துவீச்சாளர், புதிய பந்துவீச்சாளர் என்றெல்லாம் பார்ப்பதில்லை. சிக்சர் அடிப்பதற்காக என்னிடம் தனித் திறமை இருப்பதாக நம்புகிறேன். அதற்காக கடும் பயிற்சி எடுத்துவருகிறேன்’ என்கிறார்.