யூரோ கோப்பை: ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் விறுவிறுப்பு நிறைந்த ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தி ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
விறுவிறுப்பு நிறைந்த யூரோ கோப்பை கால்பந்தில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி, குரேஷியாவை எதிர்த்து விளையாடியது. 20 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரி அடித்த ஒன் கோலால் குரேஷியா அணி முன்னிலை பெற்றது. 38 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் சரபியா கோல் அடித்து சமன் செய்தார். 57 ஆவது நிமிடத்தில் இஸ்பிலிகுவேட்டா ஸ்பெயின் அணிக்கான இரண்டாவது கோலை அடிக்க, 76 ஆவது நிமிடத்தில் பெர்னான்டோ டோரஸ் மூன்றாவது கோலை அடித்தார்.
ஆச்சர்யமளிக்கும் வகையில் ஆட்டம் முடியப்போகும் நேரத்தில் 7 நிமிட இடைவெளியில் குரேஷிய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து சமன்செய்தது. ஓர்சிச், பசாலிச் ஆகியோர் கோல் அடிக்க போட்டி சமனானது. இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணியின் ஆல்வாரோ மொரட்டா , ஓர்யாபசல் ஆகியோர் கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.
மற்றொரு ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்த்து விளையாடியது. 15 ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து கோல் கணக்கை தொடக்கியது. செஃபரோவிச் முதல் கோல் அடித்தார். பின்னர் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்விட்சர்லாந்து அணி தவறவிட்டது. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்திலும், 59 ஆவது நிமிடத்திலும் கரீம் பென்சமா அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து ஃபிரான்ஸ் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார்.
75 ஆவது நிமிடத்தில் பால் போக்பா தங்கள் அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். ஆனால் விடாது போராடிய சுவிட்சர்லாந்து அணி 81ஆவது நிமிடத்திலும், கடைசி நிமிடத்திலும் கோல் அடித்து சமன்செய்தது. செஃபரோவிச், கேவ்ரனோவிச் ஆகியோர் கோல் அடித்தனர். இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி சூட் அவுட் முறை கையாளப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 5-4 என வெற்றியை வசப்படுத்தியது.