தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் - என்ன அது?
89 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் தோனியின் 17 வருட சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளார் ரிஷப் பண்ட்.
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
இதையடுத்து ரிஷப் பண்ட்டும், ஜடேஜாவும் இணைந்து தத்தளித்த இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். ஜடேஜா பொறுமையுடன் ஆட , அரை சதம் கடந்த ரிஷப் பண்ட் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்க விட்டார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பண்ட் 111 பந்துகளில் 146 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச்சில் ஆட்டமிழ்ந்தார். இதில் 19 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்துள்ள நிலையில் ஜடேஜா 83 ரன்னிலும், முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் உள்ளனர்.
இதனிடையே நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட் தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார். தற்போதைய இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நேற்றைய ஆட்டத்தில் 89 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் விக்கெட் கீப்பர்களில் எம்எஸ் தோனி 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் சதமடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து மண்ணில் 2 சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனைப் படைத்துள்ளார். இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 2,000 ரன்களை பதிவு செய்த ரிஷப் பண்ட், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2,000 ரன்களை கடந்த இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பெற்றுள்ளார்.
இதையும் படிக்கலாம்: இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி