இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி

இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி

ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் பர்மிங்காமில் நிலவிய மேகமூட்டமான நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸில் பந்துவீச்சில் இந்தியாவின் டாப் ஆர்டரே ஆட்டம் கண்டது.

சுப்மான் கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும், விஹாரி 20 ரன்களிலும் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களில் மேட்டியில் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் 15 ரன்களுக்குள் பெவிலியன் திரும்ப 98 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தள்ளாடத் துவங்கியது.

சரிவில் இருந்து அணியை மீட்கும் பணியில் இறங்கியது ஜடேஜா- ரிஷப் பண்ட் இணை. ஜடேஜா நிதான ஆட்டத்தை கையிலெடுக்க, ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தின் பக்கம் திரும்ப ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. 51 பந்துகளில் அரை சதம் விளாசிய பண்ட், 89 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ஐந்தாவது சதம் இதுவாகும். அவர் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்துள்ளார். சதம் கடந்ததும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார் ரிஷப். லீச்சின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனால், 63.1 ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பண்ட் 111 பந்துகளில் 146 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதில் 19 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி  200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரை சதம் கடந்தார். அடுத்துவந்த ஷர்துல் தாகூர் 1 ரன்னில் வெளியேறினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா 83 ரன்னிலும், முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டும் பாட்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையும் படிக்கலாம்: “எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com