லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்தது. பட்லர் 89, குக் 71, முகமது அலி 50 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் ஜடேஜா 86 ரன்கள் எடுத்து இதுவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அறிமுக வீரர் விஹாரி 56 ரன்களும், கேப்டன் விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட், முகமது அலி தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 40 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3வது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. குக் 18, ரூட் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து நான்காவது நாளான இன்று குக், ரூட் இருவரும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர். குக் நிதானமாக விளையாட ரூட் ஒருநாள் போட்டியை போல் அடித்து விளையாடினார். இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். குக் 127 பந்துகளிலும், ரூட் 81 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரது அற்புதமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக் சதம் அடித்தார். இத்தப் போட்டியுடன் குக் ஓய்வு பெறவுள்ள நிலையில், தனது கடைசிப் போட்டியை சதத்துடன் அவர் நிறைவு செய்கிறார். டெஸ்டில் அவருக்கு இது 33வது சதம் ஆகும். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 73.6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. குக் 103(222), ரூட் 92(132) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி மொத்தத்தில் 283 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.
தனது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அலெஸ்டர் குக் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 2006ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற டெஸ்டில் தான் குக் அறிமுகமானார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 60 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 104 ரன்களும் எடுத்தார். இந்தியா உடன் தொடங்கிய அவரது பயணம் தற்போது இந்திய அணியுடனே முடிவடைகிறது.
முதல், கடைசி போட்டிகளில் சதம் அடித்தவர்கள்:-
ரெக்கி டஃப் - ஆஸ்திரேலியா (1902-1905)
பில் போன்போஃர்டு - ஆஸ்திரேலியா (1924-1934)
கிரேக் சேப்பல் - ஆஸ்திரேலியா (1970-1984)
முகமது அசாருதீன் - இந்திய (1984-2000)
அலெஸ்டர் குக் - இங்கிலாந்து (2006-2018)