ஆஸ்திரேலியாவிடம் எடுபடுமா இங்கிலாந்து ஆட்டம் : அனல் பறக்கும் மோதல்
இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் நேற்று முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபின்ச் 14 (17) ரன்களில் விக்கெட்டை இழந்ததால், தற்போது டேவிட் வார்னர் மற்றும் ஷான் மார்ஸ் ஆகியோர் விளையாடி வருகின்றனர். தற்போது அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்து நடைபெறுவதால் சொந்த மண்ணில் அந்த அணி வலுவாக காணப்படுகிறது. சில தினங்களுக்கு பாகிஸ்தானிற்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த கிரிக்கெட் தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்றது. ஒரே ஒரு போட்டி மற்றும் மழையால் நடைபெறவில்லை. இதற்கு முன்னரும் இங்கிலாந்து நடந்து போட்டிகளில் அந்த அணி வெற்றி முகத்துடனே பயணித்துள்ளது. ஆனால் பெரும் பலத்துடனும், இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடிய ஆஸ்திரேலியாவிடம், அவர்களின் பாட்ஷா பளிக்குமா ? என்பதை இன்றைய போட்டியின் முடிவில் காணலாம்.