இன்று 2 வது அரையிறுதி: ஆஸி.யை சமாளிக்குமா இங்கிலாந்து?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து–ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை தொடரில் முதலாவது அரையிறுதியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து. இந்நிலையில் இரண்டாவது அரை யிறுதி போட்டி பர்மிங்காமில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி லீக் சுற்று முடிவில், 14 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது. அந்த அணி பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் நடப்பு தொடரில் 638 ரன்கள் குவித்திருக்கிறார் டேவிட் வார்னர். ஆரோன் பின்ச், 2 சதம், 3 அரைசதம் உள்பட 507 ரன்கள் எடுத்திருக்கிறார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்மித் ஆகியோரும் ஃபார் மில் உள்ளனர்.
பந்து வீச்சில் ஸ்டார்க், 26 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் சாய்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக் கு கம்மின்ஸ், பேரண்ட்ரோப் பலமாக இருக்கின்றனர். காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாத ஸ்டோயினிஸ், ஷான் மார்ஷ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்கள்.
இங்கிலாந்து அணி, லீக் சுற்றில் 12 புள்ளிகள் எடுத்து 3வது இடம் பிடித்திருந்தது. அந்த அணியும் வலுவான அணியாகவே இருக்கிறது. பேட்டிங்கில் ஜோரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ஜேசன் ராய், மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர் மிரட்டுகிறார் கள். பந்து வீச்சில் ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட் ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். அதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆஸ்திரேலிய அணி 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றதில்லை என்பதால், இன்றைய போட்டியில் அதிக நம்பிக்கையுடன் களமிறங்கும்.
போட்டி நடக்கும் பர்மிங்காமில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி தடைபடலாம். பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது.