’முட்டாள்தனமா விமர்சிக்கிறாங்க’: அடில் ரஷித் பதிலடி!

’முட்டாள்தனமா விமர்சிக்கிறாங்க’: அடில் ரஷித் பதிலடி!
’முட்டாள்தனமா விமர்சிக்கிறாங்க’: அடில் ரஷித் பதிலடி!

தன்னைப் பற்றி முட்டாள்தனமாக விமர்சிக்கிறார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அடில் ரஷித், முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக, எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. 

(2015-ம் ஆண்டு மைக்கேல் வாகனிடம் இருந்து டெஸ்ட் தொப்பியை வாங்கும் ரஷித்)

இந்நிலையில் இந்திய அணியுடன் மோதும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சுழல் பந்துவீச்சாளர், அடில் ரஷித் இடம்பெற்றுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 30 வயதான ரஷித் இதுவரை 10 டெஸ்ட்களில் விளையாடி 38 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றிருந்தார். சிவப்பு நிற பந்துகளில் விளையாடுவதைத் தவிர்த்து குறுகிய வடிவிலான போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாக அவர் கூறி வந்த நிலையில், திடீரென டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, ’ 4 நாள் பயிற்சி போட்டியில் பங்கேற்காத ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்துள்ளோம். அவர் சிறப்பாக ஆடுவாரா, இல்லையா என்பதை மறந்துவிடுவோம். ஆனால், இந்த முடிவு அபத்தமானது’ என்று கூறியுள்ளார். ’இது, நூறு சதவிகித உண்மை’ என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காஃப், ஆதரவு தெரிவித்துள்ளார்.

யார்க்‌ஷயர் கிளப் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஆர்தர் அவரது இணையதளத்தில், ’இந்த தொடரில் சிகப்பு நிறப் பந்தில் கிரிக்கெட் ஆடாத ரஷீத்தைத் தேர்வு செய்ததை அறிந்து ஆச்சரியமானோம். அவரும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்துக்கு நாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் சரி’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அடில் ரஷித். அவர் கூறும்போது, ‘மைக்கேல் வாகன் அதிகமாகப் பேசுகிறார். அவர் பேசுவதை எல்லோரும் கவனிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவரை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவருக்கு என் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. அவர் தலைமையின் கீழ், விளையாடி இருக்கிறேன். சில நேரம் முன்னாள் வீரர்கள் இப்போதைய வீரர்கள் பற்றி முட்டாள்தனமாகப் பேசுகின்றனர். நான், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக எப்போதும் அறிவிக்கவில்லை. வேறு பண்டிதர்கள் யாராவது சொல்லியிருக்கக் கூடும். நாட்டுக்காக என்னை விளையாட அழைக்கும்போது, மாட்டேன் என்று சொல்ல முடியாது’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com