உலகக்கோப்பை இறுதிப் போட்டி: இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு
மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற இங்கிலாந்து 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு மெதுவாக இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த நிலையில், வின்ஃபீல்டின் விக்கெட்டை ராஜேஷ்வரி கெய்க்வாட் வீழ்த்தினார். தொடரில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முன்னணியில் உள்ள பீமவுண்ட், 23 ரன்கள் எடுத்த நிலையில் பூனம் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் ஹீதர் நைட் ஒரு ரன்னில் வெளியேறினார். 63 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்குக் கைகோர்த்த சாரா டெய்லர் – நடாலி ஸ்கீவிவெர் இணை 83 ரன்கள் குவித்தனர். சாரா டெய்லர் 45 ரன்களிலும், ஸ்கீவிவெர் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜுலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.