‘ஃபிளெமிங் இங்கிலாந்துக்கு தேவையில்லை.. தோனியால் தான் அவர் சிறந்த கோச்’ - சர்ச்சை கிளப்பிய ENG வீரர்
2026 ஐபிஎல் சர்ச்சையைத் தொடர்ந்து, சிஎஸ்கேவில் 18 ஆண்டுகள் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங் விலகி, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தோனியால் தான் பிளெமிங் சிறந்த கோச் என்ற பெயர் பெற்றார், அவரால் இங்கிலாந்துக்கு பலன் இல்லை என மான்டி பனேசர் விமர்சித்து, 2005 ஆஷஸ் வெற்றியால் நிரூபித்த மைக்கேல் வாகனே சரியான தேர்வு என வலியுறுத்துகிறார்.
2026 ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தான் பேசுபொருளாக இருந்தார். கடைசியாக தோனி தலைமையில் 2023 ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதற்குபிறகு ருதுராஜ் மற்றும் பிளெமிங் கூட்டணியில் படுமோசமாகவே செயல்பட்டது.
இந்தசூழலில் 2026 ஐபிஎல் தொடரின்போது பிளெமிங் குறித்து டெல்லி பயிற்சியாளர் ஹேமங் பதானி பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையாக மாறியது. அவர் பேசியிருந்த வீடியோவில், ”சிஎஸ்கேவில் தோனி இருக்கிறார், ஃபிளெமிங் இருக்கிறார். ஆனால் தோனி தான் அனைத்தையும் பார்த்துக்கிறார், அது எல்லாருக்குமே தெரியும். இப்போ ஃபிளெமிங் இவ்ளோ பெரிய கோச்சாக இருக்கார் என்றால், ஐபிஎல் தவிர்த்து வேற எங்கயும் அவர் ஜெயிச்சதே கிடையாது. SA20, ஹண்ட்ரட், பிக்பேஷ் லீக் என எதுலையும் அவர் ஜெயிச்சது கிடையாது, ஏன் நியூசிலாந்துக்கு அஸிஸ்டண்ட் கோச்சா இருந்தபோதும் அவருக்கு வெற்றி கிடையாது. அதனால ஃபிளெமிங் வந்து நல்ல கோச்னு யாராவது என்கிட்ட சொன்னாங்கனா நான் ஒத்துக்க மாட்டேன். தோனியால தான் சிஎஸ்கே ஜெயிக்கிறாங்க” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் பதானி கூறிய அதே கருத்தை தற்போது முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூரியுள்ளார்.
சிஎஸ்கே அணியில் 18 வருடங்களாக பயணித்த ஸ்டீபன் பிளெமிங், தன் மீதான விமர்சனங்களுக்கு பிறகு சென்னை அணியிலிருந்து விலகினார். பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். மெக்கல்லம் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில், புதிய பயிற்சியாளராக பிளெமிங்கும், புதிய இங்கிலாந்து கேப்டனாக ஜோ ரூட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தசூழலில் தான் புதிய பயிற்சியாளர் பிளெமிங் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், தோனியால் தான் அவர் சிறந்த பயிற்சியாளர் என்ற பெயரை எடுத்தார், அவரால் இங்கிலாந்து அணிக்கு சிறந்ததை செய்ய முடியாது, அவரிடத்தில் மைக்கேல் வாகனை தேர்வுசெய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசியிருக்கும் பனேசர், “இசிபி மைக்கேல் வாகனை பயிற்சியாளராக நியமித்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் 2005-ல் ஆஷஸ் தொடரை வென்றார். ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக வெற்றிகளைத் திட்டமிட்டுப் பெறுவது எப்படி என்று அவருக்குத் தெரியும். அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர், அதுமட்டுமில்லாமல் அவரிடம் சிறந்த மேன் - மேனேஜ்மெண்ட் திறன் இருக்கிறது. இது ஒரு மனித மேலாண்மைப் பொறுப்பு என்பதால் பிளெமிங்கிற்கு பதிலாக வாகனை நியமித்திருக்கலாம்.
எம்.எஸ். தோனி போன்ற சிறந்த நபர் இல்லாத நிலையில், அவர்கள் ஃபிளெமிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஃபிளெமிங்கை ஒரு சிறந்த பயிற்சியாளராக மாற்றியது என்ன? தோனி தான். இதை நாம் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அவர் நீண்ட காலமாக தோனியுடன் பணியாற்றி வருகிறார். திடீரென்று, தோனியால் முன்பு போல் ஐபிஎல்-லில் தீவிரமாக செயல்படமுடியவில்லை. அதனால் ஃபிளெமிங்காலும் சென்னை சூப்பர் கிங்ஸை அதே நிலையில் வைத்திருக்க முடியவில்லை. இந்தசூழலில் ஒரு பயிற்சியாளராக பிளெமிங் எவ்வளவு சிறந்தவர் என்பதை இனிமேல் தான் தெரிந்துகொள்ள போகிறோம்” என பேசியுள்ளார்.

