"கொன்றாலும் பரவாயில்லை இங்கிலாந்துதான் வெற்றிப் பெறும்" - ஆகாஷ் சோப்ரா கருத்து
லார்ட்ஸில் இன்று நடைபெறும் 5-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்துதான் வெற்றிப் பெறும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா "லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பெறும். இதனை சொன்னதற்காக என்னை கொன்றாலும் பரவாயில்லை. எனக்கு இங்கிலாந்துதான் வெற்றிப் பெறும் என்று தோன்றுகிறது. கடைசி நாளான இன்று ஆடுகளத்தில் ஏற்கெனவே மாறுதல்கள் தெரிந்துவிட்டது. பந்தின் பவுன்ஸ் அவ்வப்போது மாறுகிறது. ஆடுகளம் மிகவும் மந்தமாகிவிட்டது. அதனால் 6 விக்கெட் இழந்த பின்பு இந்தியா பேட்டிங் செய்வது மிகவும் கடினம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "இன்றைய நாளில் என்னுடைய கணிப்புப்படி இந்தியா 20 ஓவர்களில் ஆட்டமிழந்துவிடுவார்கள். அதிகபட்சமாக இங்கிலாந்தை விட இந்தியா 190 ரன்கள் முன்னிலை வகிக்கலாம். ஆனால் 190 ரன்களுக்கு மேல் அல்லது 200 ரன்களுக்கு மேல் இந்தியா அடித்துவிட்டால் இந்திய பவுலர்களால் ஓரளவுக்கு இங்கிலாந்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதற்கு சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன்" என்றார் ஆகாஷ் சோப்ரா.