ஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்து தனது முந்தையை உலக சாதனையை முறியடித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில்சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் நாட்டிங்ஹம் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ராய், பையர்ஸ்டோவ் களமிறங்கினர். தொடக்கம் முதலே பந்துகளை வீணடிக்காமல் அடித்து விளையாடினர். இதனால், இங்கிலாந்து அணி 7.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. அதன் பிறகு இருவரும் அதிரடியில் இறங்கினர். பையர்ஸ்டோவ் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 13.1 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 159 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ராய் 61 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
பின்னர், பையர்ஸ்டோவ் உடன் ஹேல்ஸ் இணைந்தார். இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்த்தனர். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்கவிட்டனர். இதனால், ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடியை ஆஸ்திரேலிய வீரர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை. இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 23.5 ஓவர்களில் 200 ரன்களையும், 33.1 ஓவர்களில் 300 ரன்களையும் எட்டியது. ஹேல்ஸ் 62 பந்துகளில் சதம் விளாசினார். 34.1 ஓவர்களில் 310 ரன்கள் எடுத்திருந்த போது பையர்ஸ்டோவ் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும்.
பின்னர் வந்த பட்லர் 11 ரன்னில் ஆட்டமிழந்த போதும், மோர்கன் ஹேல்ஸ் உடன் சேர்ந்து அதிரடி காட்டினார். 43 ஓவர்களில் இங்கிலாந்து அணி 400 ரன்களை எட்டியது. மோர்கன் 21 பந்துகளில் அரைசதம் விளாசினார். 46 ஓவர்களில் இங்கிலாந்து 450 ரன்கள் குவித்தது. இதனால், கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து 500 ரன்களை இங்கிலாந்து அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.
ஹேல்ஸ் 92 பந்துகளில் 147 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 16 பவுண்டரிகளும் அடங்கும். அவரை தொடர்ந்து மோர்கன் 30 பந்துகளில் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ரிச்சர்ஸ்சன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து 444/3 ரன்கள் குவித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. இந்தத் தொடரில் தன்னுடைய முந்தைய சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.