36 ஆண்டு கால நியூசிலாந்து சாதனையை உடைத்தெறிந்த இங்கிலாந்து
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணி வழக்கமான பாணியில் நியூசிலாந்து அணி பவுலர்களை பந்தாடினர். அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த பேர்ஸ்டோவ் நடப்பு தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
முந்தைய போட்டியிலும் சதமடித்திருந்த பேர்ஸ்ட்டோவ் உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்தார். பட்லர்,ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மத்தியவரிசை வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காத நிலையில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து 306 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி , முதல் ஓவரிலேயே நிக்கோலஸின் விக்கெட்டை இழந்தது. மற்றொரு தொடக்கவீரரான கப்டிலும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார். ஓரளவு ரன்களைச் சேர்த்த வில்லியம்சன்,டெய்லர் இருவரும் ரன் அவுட் ஆகி வெளியேற அந்த அணி 69 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
நடுகள ஆட்டக்காரர்களில் பெரும் நம்பிக்கையாக கருதப்பட்ட நீஸம்,கிராண்ட் ஹோம் கூட்டணியும் நிலைத்து ஆட தவறினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் 57 ரன்களை எடுத்தார். 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 182 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியின் மூலம் 36 ஆண்டுகளாக உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தவில்லை என்ற வரலாற்றையும் இங்கிலாந்து மாற்றியுள்ளது.