28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து - ஸ்வீடன் அணியை 2-0 என வீழ்த்தியது
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஸ்வீடன் அணிக்கு எதிரான காலிறுதியில் இரண்டு கோல்கள் அடித்து இங்கிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தியது.
இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான காலிறுதியாட்டம் ரஷ்யாவின் சமரா நகரில் களைகட்டியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 30 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணியின் தடுப்பாட்டக்காரர் ஹேரி மெக்கியுர் தலையால் முட்டி கோல் கணக்கை தொடங்கினார். 25 வயதாகும் மெக்கியுருக்கும் சர்வதேச போட்டியில் அது முதல் கோலாக அமைந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 59 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது கோலை அடித்தது. மற்றொரு இளம் வீரர் டெலே அல்லி பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார். உலகக்கோப்பை போட்டியில் டெலேவில் முதல் கோலாக அது அமைந்தது.
ஸ்வீடன் அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் சிறப்பாக செயல்பட்டு ஸ்வீடன் அணியின் கோல் முயற்சிகளை தகர்த்தெறிந்தார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 28 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை கால்பந்தில் அரையிறுதிக்கு முன்னேறியது.