சேப்பாக்கம் டெஸ்ட்டில் மிரட்டிய மொயின் அலி - ஐபிஎல் ஏலத்தில் தட்டி தூக்கிய சிஎஸ்கே!
வரும் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலியும் பங்கேற்றிருந்தார். கடந்த சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்தார்.
இடது கை பேட்ஸ்மேனும், வலது கை சுழற்பந்து வீச்சாளருமான மொயின் அலியின் அடிப்படை விலை இரண்டு கோடி ரூபாயாகும். அண்மையில் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மொயின் அலி 18 பந்துகளில் 43 ரன்களை விளாசியிருந்தார். தவிர 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இந்த சூழலில் அவரது பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நொடி முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவரை வாங்குவதில் குறியாக இருந்தன. இறுதியில் தோனி சேனைக்காக மொயின் அலி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இப்போது அவர் சென்னையின் சொத்தாகி உள்ளார்.
இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மொயின் 309 ரன்களையும், 10 விக்கெட்டுகளையும் அள்ளியுள்ளார். 2018 முதல் பெங்களூரு அணிக்காக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.