டி-20 கிரிக்கெட்: ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி சாதனை
இருபது ஓவர் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி என்ற வீராங்கனை ஆயிரம் ரன்கள் மற்றும் நூறு விக்கெட்டுகள் எடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியா வென்ற இந்த ஆட்டத்தில், ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எல்லிஸ் பெர்ரி எட்டினார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை நடாலி ஸ்கிவரை ஆட்டமிழக்கச் செய்து எல்லிஸ் பெர்ரி நூறாவது விக்கெட் டை கைப்பற்றியிருந்தார்.
ஆல்ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி படைத்திருக்கும் இந்த சாதனை, ஆண் பெண் இருபாலருக்குமான டி-20 போட்டியில், கிரிக்கெட் ஆட்டக்காரர் ஒருவர் எட்டியிருக்கும் முதல் மைல்கல்லாகும்.
இருபது ஓவர் கிரிக்கெட்டில், வீரர்களைப் பொருத்தவரையில் பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிதி ஆயிரத்து 498 ரன்களையும், 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இருப்பினும், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இவர் தவிர, பங்களாதேஷ் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், ஆயிரத்து 471 ரன்களும், 88 விக்கெட்டு களும் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.