தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் ?

தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் ?
தமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் ?

சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  யார் இந்த இளவேனில் வாலறிவன்? 

1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வாலறிவன் பிறந்தார். இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். முதலில் இவர் இதனை ஒரு பொழுது போக்காக நினைத்து மேற்கொண்டார். ஆனால் தற்போது அது அவரது வாழ்க்கையின் சிறந்த லட்சியமாக மாறியுள்ளது. 

2013ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல் முறையாக இவர் வெண்கல பதக்கம் வென்றார். அதன் பிறகு தனது 15ஆவது வயதில் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இவர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்காக தினமும் 60 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார். அப்போது இவருக்கு படிப்பையும் துப்பாக்கிச் சுடுதலையும் ஒன்றாக கையாளுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் மனம் தளராமால் இவர் படிப்பையும் துப்பாக்கிச் சுடுதலையும் சிறப்பாக செய்து வந்தார். அத்துடன் அவர் ஜூனியர் பிரிவில் குஜராத் மாநிலத்தின் சார்பில் பங்கேற்று வந்தார்.

2017ஆம் ஆண்டு இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் ககன் நராங்,  துப்பாக்கிச் சுடுதலில் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளை கண்டறிந்து பயிற்சியளிக்க ‘புராஜெக்ட் லீப்’ (Project Leap) என்ற திட்டத்தை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தில் சேர இளவேனில் வாலறிவேன் தேர்வானார். இதனைத் தொடர்ந்து இவர் ககன் நராங்கிடம் பயிற்சி பெற ஆரம்பித்தார். இந்தப் பயிற்சியால் அதிக பலன் அடைந்த இளவேனில் 2018ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில் பங்கேற்றார். இந்தத் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஷுல் (suhl) பகுதியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இரண்டு முறை ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இவர் சாதித்தார். எனினும் இந்த ஆண்டு ஜெர்மனியின் முனிச் (Munich) நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் வெறும் 0.1 புள்ளி வித்தியாசத்தில் இளவேனில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். 

இந்நிலையில் நேற்று பிரேசிலின் ரீயோடி ஜெனேரீயோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் முதல் முறையாக சீனியர் பிரிவில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதுவரை ஜூனியர் பிரிவில் சாதனைப் படைத்து வந்த இளவேனில் தற்போது சீனியர் பிரிவிலும் கால் பாதிக்க ஆரம்பித்து விட்டார். இவர் ஒரு தமிழர் என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com