இந்தியாவை வீழ்த்த ரூட் பயன்படுத்திய துருப்புச் சீட்டு இவர்தான்..!

இந்தியாவை வீழ்த்த ரூட் பயன்படுத்திய துருப்புச் சீட்டு இவர்தான்..!

இந்தியாவை வீழ்த்த ரூட் பயன்படுத்திய துருப்புச் சீட்டு இவர்தான்..!
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்தவர்  கர்ரன் தான்.

பிர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் எடுத்தன. இந்திய அணி வெறும் 13 ரன்களே பின் தங்கி இருந்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி அஷ்வின், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 87 ரன்கள் எடுப்பதற்கு இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதனால், 120 ரன்களுக்கு அந்த அணி சுருண்டு விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், தனி ஆளாக ஆட்டத்தின் போக்கையே மாற்றிக் காட்டினார் சாம் கர்ரன். 

ஒருநாள் போட்டியைப் போல் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், அவர் தனது அதிரடியை கட்டுப்படுத்தவில்லை. டெஸ்ட் போட்டி என்றுகூட பார்க்காமல் இறுதிவரை விளாசி தள்ளினார். கடைசி விக்கெட்டாக தான் சாம் கர்ரன் 65 பந்துகளில் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

சாம் கர்ரன் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தது. இதனால், 194 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவரை மட்டும் விரைவில் வீழ்த்தி இருந்தால், 150 ரன்களுக்குள் தான் இலக்கு இருந்திருக்கும். நிறைய கேட்சுகளையும் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டார்கள். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சிலும் கர்ரன் 71 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.

முதல் இன்னிங்சிலும் இந்திய அணியை மிரட்டியவர் சாம் கர்ரன் தான். இந்திய வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க செய்தார். 59 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை சாய்த்துவிட்டார். இரண்டாவது இன்னிங்சில் அதிகம் அவர் பந்துவீசவில்லை. 6 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். 

20 வயதே ஆன சாம் கர்ரன் மொத்தமே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். இதுதான் அவரது இரண்டாவது டெஸ்ட். இரண்டாவது இன்னிங்சில் அடித்த 63 ரன்கள் தான் டெஸ்டில் அவரது அதிகபட்ச ரன். அதேபோல், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் தான் விளையாடியுள்ளார். அனுபவமே இல்லாத ஒரு வீரரை களமிறக்கி இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் இந்தியாவை வீழ்த்திவிட்டார். கேப்டன் விராட் கோலியை தவிர்த்து மற்ற இந்திய வீரர்கள் ரன் அடிக்காமல் சொதப்பியது முக்கிய காரணம் தான். அதேவேளையில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com