கொரோனா அச்சுறுத்தல் : மகளிர் உலகக் கோப்பை தொடர் 2022-க்கு ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக மகளிர் உலகக் கோப்பை தொடரை 2022 ஆண்டிற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 50 ஓவர் கொண்ட மகளீர் உலக கோப்பை தொடரின் 12வது எடிஷனை ஒத்திவைக்க ஐசிசி வாரியக் கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘நியூசிலாந்தில் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது 2022 ஆண்டிற்கு உலகக் கோப்பை தொடரை ஒத்திவைத்துள்ளோம். கொரோனா அச்சுறுத்தல் தான் இதற்கு காரணம்’ என்று ஐ.சி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாட முன்னதாகவே தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள அணிகள் தகுதி போட்டிகளின் ரிசல்ட்டை பொறுத்தே உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.
உலக கோப்பை தொடர் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் மித்தாலி ராஜ் மற்றும் சீனியர் வீரர்கள் அந்த தொடரில் விளையாடுவதும் சிக்கலாகியுள்ளது.