காயம்: டிவில்லியர்சை தொடர்ந்து டுபிளிசிஸும் விலகினார்!
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ், இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இப்போது ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் ஆடி வருகின்றன. டர்பனில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, அபாரமாக வெற்றி பெற்றது. அடுத்த போட்டி, நாளை நடக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக, தென்னாப்பிரிக்கா கேப்டன் டுபிளிசிஸ் விலகியுள்ளார். கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்படும் அவர், இந்திய அணியுடனான எஞ்சிய போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பர்ஹான் பெஹர்தீன் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டனாக ஹாசிம் ஆம்லா செயல்படுவார் என்று தெரிகிறது.
காயம் காரணமாக டிவில்லியர்ஸ் ஏற்கனவே விலகியுள்ள நிலையில், முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த டுபிளிசிஸும் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.