“தோனிபோல கேப்டனாக என்னால் செயல்பட முடியாது” - டுபிளசிஸ் ஓபன் டாக்
தோனியின் கேப்டன்சி தான் நினைத்ததற்கு முற்றிலும் எதிராக இருந்தது என்றும் தன்னால் தோனி போன்ற கேப்டனாக செயல்பட முடியாது எனவும் ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ஃபாப் டுபிளசிஸ் தெரிவித்துள்ளார்.
2022 ஆண்டுக்கான ஐபிஎல் துவங்க உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது புதிய கேப்டனாக ஃபாப் டு பிளசிஸை நியமிப்பதாக சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டுபிளசிஸை வாங்கியது ஆர்சிபி.
2011-2021 வரை 9 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார் டுபிளசிஸ். 2016 மற்றும் 2017 சீசன்களில் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2016 மற்றும் 2017 சீசன்களிலும் தோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற சீசனில் அவர் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்தார். தோனியுடனான தனது அனுபவம் குறித்து டுபிளசிஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
“நான் சென்னை அணியில் விளையாடத் துவங்கும் போது, தோனியின் கேப்டன்சி எப்படி இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் தோனி கேப்டன்சி நான் நினைத்ததற்கு முற்றிலும் எதிராக இருந்தது. ஒவ்வொரு கேப்டன்சியிலும் வெவ்வேறு பாணிகள் இருந்தன. ஆனால் உங்கள் சொந்த பாணியாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், அழுத்தம் இருக்கும் போது அதுதான் வரும். அதனால், என்னால் விராட் கோலியாக இருக்க முயற்சிக்க முடியாது, ஏனென்றால் நான் விராட் கோலி இல்லை. எம்எஸ் தோனி போன்ற கேப்டனாக இருக்க என்னால் முடியாது. ஆனால் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனது தலைமைத்துவ பாணியை வளர்க்கவும் முதிர்ச்சியடையவும் உதவியது. எனவே, அந்த பயணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று புதிய ஆர்சிபி கேப்டன் டுபிளசிஸ் கூறினார்.