“ரிஷப்க்கு வாய்ப்பு கொடுப்பீர்கள்.. சஞ்சு சாம்சனுக்கு இல்லையா?” - கொதிக்கும் நெட்டிசன்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்று டெஸ்ட், 20 ஓவர், ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் வரும் 24ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான அணியை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெறாத ரோகித் சர்மாவும் முகமது ஷமியும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறி ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனுக்கு இதுவரை இரண்டே இரண்டு டி20 போட்டிகளில் தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெற்றிருந்த போதிலும், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. இந்திய அணியை பொறுத்தவரை தோனி அணியில் இடம்பெறாத நிலையில், ரிஷப் பண்டிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். மிகவும் திறமையான வீரர். ஏன் ரிஷப் பண்ட் போல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
மற்றொருவர் தன்னுடைய பதிவில், ‘இந்திய அணியில் சமமற்ற நீதி நிலவுவதற்கு சாட்சியாக சஞ்சு இருக்கிறார். ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு தற்போது நீக்கியுள்ளார். நல்ல தேர்வு’ என குறிப்பிட்டிருந்தார்.
இன்னொரு நெட்டிசன் காட்டமாக, ‘சஞ்சு சாம்சன் என்ன தவறு செய்தார்?. ரிஷப் பண்ட் இதுவரை என்ன சிறப்பாக செய்துவிட்டார். சஞ்சுவை தேர்வு செய்தீர்கள், ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது அவரை புறக்கணித்துள்ளீர்கள்’ என்று தெரிவித்து இருந்தார்.
சஞ்சு சாம்சன் 55 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 10 சதம், 12 அரைசதம் உட்பட 3162 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.64. இவருக்கு 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு 4 நான்கு ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடினார். முதல் பந்திலே சிக்ஸர் விளாசிய சஞ்சு, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

