"உண்மையில் எப்படி நடந்துகொள்வதென்று எனக்கு தெரியவில்லை'' - ரோஹித் கருத்து குறித்து அஸ்வின்
''ரோஹித்திடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. பாராட்டுக்களைப் பெறுவதில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன்'' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அஷ்வின்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியை வெறும் 3 நாட்களில் முடித்த இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தனர்.
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “இந்திய அணிக்காக அஸ்வின் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரையில் அஸ்வின் ‘ஆல்-டைம் கிரேட் பிளேயர்’. அவர் உண்மையில் சிறந்த வீரர்தான். பலரும் அவர் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவர்தான் சிறந்த வீரர்’’ என பேசியிருந்தார்.
ரோஹித் சர்மாவின் பாராட்டு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலைத்த ரவிச்சந்திரன் அஷ்வின், "ரோஹித்திடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. பாராட்டுக்களைப் பெறுவதில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். உண்மையில் எப்படி நடந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்.
இதையும் படிக்க: இறப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக வார்னே எனக்கு மெசேஜ் செய்தார்: கலங்கும் கில்கிறிஸ்ட்