“கோலியின் ஐபிஎல் அனுபவம் உலகக்கோப்பையை பாதிக்காது ” - கங்குலி

“கோலியின் ஐபிஎல் அனுபவம் உலகக்கோப்பையை பாதிக்காது ” - கங்குலி

“கோலியின் ஐபிஎல் அனுபவம் உலகக்கோப்பையை பாதிக்காது ” - கங்குலி
Published on

ஐபிஎல்-ஐ வைத்து கோலியை கணிக்காதீர்கள் என்றும் ஒருநாள் போட்டிகளில் அவரின் சாதனைகள் சிறப்பானவை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மே மாத 30ம் தேதி உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் தற்போது தான் ஐபிஎல் தொடரை முடித்தனர். விரைவில் இந்திய அணி வீரர்களும் பயிற்சியை தொடங்கவுள்ளனர். 

உலகக்கோப்பையை வெல்ல இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெரிதாக ஜொலிக்காத விராட் கோலி உலகக்கோப்பை போட்டிகளை எப்படி கையாளப் போகிறார் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் தொடருக்கும், உலகக்கோப்பை தொடருக்கும் தொடர்பில்லை. விராட் கோலியின் ஐபிஎல் அனுபவங்கள் எக்காரணத்தை கொண்டும் உலகக்கோப்பையை பாதிக்காது. ஒருநாள் போட்டிகளில் கோலியின் சாதனைகள் சிறப்பாக இருக்கின்றன எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், ''இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும், அனுபவ வீரர் தோனி இருப்பதும் விராட் கோலிக்கு பலமாக இருக்கும். ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அவர் மிகமிக முக்கியமான பங்களிப்பை கொடுப்பார். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இங்கிலாந்து மைதானங்களில் திறமையான விளையாட்டை வெளிப்படுத்துவார்கள். 

இதைத்தான் பாகிஸ்தானின் கடந்த கால சாதனைகள் சொல்கின்றன. ஆனால் எனக்கு முன்பு நடந்த சாதனைகளில் நம்பிக்கை இல்லை. எந்த அணியாக இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியை பொறுத்த வரை பலமாக இருக்கிறது. கோலி, தவான், தோனி, ரோஹித் போன்ற வீரர்களை வைத்திருக்கும் இந்தியாவை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com