எப்போதும் வெறித்தனமாக இருக்கக் கூடாது: கோலிக்கு ரணதுங்கா அட்வைஸ்!
ஒரு கேப்டனாக இருந்து கொண்டு எப்போது வெறித்தனமாக இருக்க வேண்டியதில்லை என்று இந்திய கேப்டன் விராத் கோலிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா அறிவுரை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்துவீச்சு இப்போது சிறப்பாக இருக்கிறது. இடையில் அதில் தொய்வு இருந்தது. இப்போது அப்படியில்லை. இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சு பிரச்னை இருக்கிறது. எங்கள் காலத்தில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். அதற்கு சரியான தலைமை முக்கியம். பிரச்னை என்னவென்றால் எல்லோரும் பணத்துக்குப் பின்னே ஓடுகிறார்கள். சம்பாதிப்பதே நோக்கமாக இருக்கிறது. அதனால் கிரிக்கெட் வீரர்களை பாதுகாப்பதையும் போட்டிகளில் வெற்றிபெறுவது பற்றியும் கவலைப்படுவதில்லை. இந்திய கேப்டன் விராத் கோலி பற்றி கேட்கிறார்கள். அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கேப்டனாக அவரை இப்போது மதிப்பிட முடியாது. அதற்கு இன்னும் காலம் வரவேண்டும். பொதுவாக நமக்கு (இந்தியா, இலங்கை) சில பண்பாடு இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களைப் போல மைதானத்தில் வெறித்தனமாக இருக்கக் கூடாது. கேப்டனாக இருந்துகொண்டு ஒவ்வொரு முறையும் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியதில்லை’ என்றார் ரணதுங்கா.