தென்னாப்பிரிக்காவுக்கு கைகொடுக்குமா ’பிங்க் டே’ சென்டிமென்ட்?

தென்னாப்பிரிக்காவுக்கு கைகொடுக்குமா ’பிங்க் டே’ சென்டிமென்ட்?
தென்னாப்பிரிக்காவுக்கு கைகொடுக்குமா ’பிங்க் டே’ சென்டிமென்ட்?

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. அதே நேரத்தில் ’பிங்க் டே’ சென்டிமென்டில் தென்னாப்பிரிக்கா அணி இருக்கிறது.

அதென்ன பிங்க் டே?

ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு கிரிக்கெட் போட்டியை ’பிங்க் டே’ போட்டியாக நடத்தி வருகிறது தென்னாப்பிரிக்கா. வழக்கமாக பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும் தென்னாப்பிரிக்கா டீம், இந்த ஆட்டத்தில் மட்டும் பிங்க் நிற ஜெர்சியுடன் களமிறங்குவார்கள். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையிலும் இப்படி களமிறங்குகிறார்கள். இந்த ஆட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட தொகை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சார்லோட் மேக்ஸிகே அகாமிடமிக் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

தென்னாப்பிரிக்கா விளையாடும் ஆறாவது பிங்க் டே போட்டி இது. இது போன்ற பிங்க் டே போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதில்லை. அதோடு பிங்க் டே போட்டிகளில் டிவில்லியர்ஸ் ரன்களை குவிப்பதும் வழக்கம். இவர் 5 ஆட்டங்களில் 450 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த சென்டிமென்டோடு தென்னாப்பிரிக்க அணி இன்று களமிறங்குகிறது. 

ஸ்பெஷல் பிரேஸ்லட்ஸ்
போட்டிக்காக சிறப்பு பிரேஸ்லட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விற்பதன் மூலம் ஒரு மில்லியன் ரேண்ட்(தென்னாப்பிரிக்க பணம்) வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரேஸ்லட்ஸ் அணிந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் இன்று களமிறங்குகிறார்கள். இன்றைய போட்டியை காண 32 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com