கொரோனா நிலைமை சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் தொடங்கும் – கங்குலி

கொரோனா நிலைமை சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் தொடங்கும் – கங்குலி

கொரோனா நிலைமை சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் தொடங்கும் – கங்குலி
Published on
கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் நிலைமை பாதுகாப்பாக இருக்கும்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்று பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் உள்பட எந்தவொரு விளையாட்டு போட்டியும் நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான (2020-21) உள்நாட்டு கிரிக்கெட் சீசன் இந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உள்ளூர் வீரர்களுக்கான போட்டிகளை தொடங்குவது காலதாமதமாகி வருகிறது.
 
இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது எப்போது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்காக வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ளது.
 
இந்நிலையில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவது தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கடிதம் எழுதியுள்ளார்.
 
‘’நிலைமை சீரானதும் உள்நாட்டு கிரிக்கெட் மீண்டும் தொடங்குவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. வீரர்கள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஈடுபடும் மற்ற அனைவரின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் பிசிசிஐக்கு மிக முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து அனைத்து அம்சங்களையும் கண்காணித்து வருகிறோம்.
 
எதிர்கால நடவடிக்கை குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக அறிவிக்கப்படும். உள்நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்குவதற்கு முன் அனைவரது ஆலோசனைகளை கேட்டுப் பெறுவோம்.
அடுத்த சில மாதங்களில் கோவிட் -19 நிலைமை சீராகும் என்றும் உள்நாட்டு கிரிக்கெட் பாதுகாப்பான சூழலில் தொடங்க முடியும் என்றும் பி.சி.சி.ஐ நம்பிக்கை கொண்டுள்ளது’’ என்றார். உள்நாட்டு கிரிக்கெட் சீசன் நவம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து சையது முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com